சிவபரம்பொருளைத் திருமால் விடை வடிவில் தாங்கிய அற்புத நிகழ்வு:

(1)
திரிபுர சம்ஹாரத் திருநாளில் பாற்கடல் வாசரான ஸ்ரீமன் நாராயண மூர்த்தி ஆதிமுதற் பொருளான சிவபெருமானை விடை வாகன வடிவில் தாங்கிய நிகழ்வினை நம் மணிவாசகப் பெருமான் பின்வரும் திருப்பாடலில் பதிவு செய்கின்றார்,

(திருவாசகம் - திருச்சாழல் - திருப்பாடல் 15)
...
தடமதில்கள் அவைமூன்றும் தழலெரித்த அந்நாளில்
இடபமதாய்த் தாங்கினான் திருமால்காண் சாழலோ

(2)
ஸ்ரீமகாவிஷ்ணு மால்விடையான அரிய குறிப்பினை நம் சுந்தரர் பெருமானாரும் பின்வரும் திருப்பாடலில் 'திரியும் முப்புரம் தீப்பிழம்பாகச் செங்கண்மால் விடைமேல் திகழ்வானை' என்று ஐயத்திற்கு இடமின்றிப் பதிவு செய்கின்றார்,

('ஆலம் தான் உகந்தானை' எனும் திருக்கச்சி ஏகம்ப தேவாரம் - திருப்பாடல் 3) 
திரியும் முப்புரம் தீப்பிழம்பாகச்
    செங்கண்மால் விடைமேல் திகழ்வானைக்
கரியின் ஈருரி போர்த்துகந்தானைக்
    காமனைக் கனலா விழித்தானை
வரிகொள் வெள்வளையாள் உமைநங்கை
    மருவி ஏத்தி வழிபடப் பெற்ற
பெரிய கம்பனை, எங்கள் பிரானைக்
    காணக் கண்அடியேன் பெற்றவாறே

(3)
பொதுவில் பரந்தாமனாரின் விடைவடிவினை 'போர்விடை' என்று சைவத் திருமுறைகள் பேசுகின்றது.

நம் அப்பர் சுவாமிகளும் 'செருவளரும் செங்கண்மால் ஏற்றினான் காண்' என்று இக்கருத்தையே பதிவு செய்கின்றார் ('எம்பந்த வல்வினைநோய்' எனும் திருவாரூர் தேவாரத்தின் 10ஆம் திருப்பாடல்).'செருவளரும்' எனும் பதம் 'போரில் சிறந்த ஏறு - போரேறு' என்பதைக் குறிக்க வந்தது.

(4)
பின்வரும் திருப்பாடலில் நம் கச்சியப்ப சிவாச்சாரிய சுவாமிகளும், 'மாயவன் ஏற்றின் மேனிகொண்டு எந்தையைத் தாங்கினான்' என்று குறிக்கின்றார்,

(கந்தபுராணம் - தக்ஷ காண்டம் - ததீசி உத்தரப் படலம் - திருப்பாடல் 314)
சாற்றும் அவ்விடைக்கே தனைத் தாங்குபேர்
ஆற்றல் ஈந்த செயலறிந்து அல்லவோ
மாற்றலார் புரம் செற்றுழி மாயவன்
ஏற்றின் மேனிகொண்டு எந்தையைத் தாங்கினான்

(5)
(இறுதிக் குறிப்பு - 'செங்கண் மால்')

தேவாரத் திருப்பாடல்களில், பொதுவில் 'செங்கண் விடை' என்று மட்டுமே வருமேயானால் அதற்கு 'சிவந்த கண்களைக் கொண்ட ஏறு' என்றும், 'மால்விடை' என்று மட்டுமே வருமாயின் அதற்கு 'சிறப்பு பொருந்திய விடை' என்றும் பொருள் கொள்வர். எனினும் 'செங்கண் மால்' என்று ஒருசேர குறிக்கப் பெறும் திருப்பாடல்கள் அனைத்தும் திருமாலான ஸ்ரீமகாவிஷ்ணுவை மட்டுமே குறிக்க வந்தது. 

'செங்கண் மால் பிரமற்கும் அறிவொணா' எனும் திருபுள்ளிருக்குவேளூர் திருப்பாடலில் நம் அப்பர் சுவாமிகள் 'செங்கண் மால்' என்றே திருமாலைக் குறிக்கின்றார்.

No comments:

Post a Comment