சிவபெருமான் ஆமை ஓட்டினை அணிகலனாக அணிந்திருப்பது எதனால்?

தேவர்களும் அசுரர்களும் மந்தர மலையை மத்தாக்கிப் பாற்கடலைக் கடைகையில், ஸ்ரீமன் நாராயணர் கூர்ம அவதார மூர்த்தியாய்த் தோன்றி அம்மலை கவிழாது நிலைநிறுத்திக் காக்கின்றார். அமுதம் வெளிப்படுகின்றது, 'அதனை எவ்விதம் பகிர்வது?' என்பது குறித்து தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் கடும் வாக்குவாதமும், போரும் நடந்தேறத் துவங்குகின்றது. 

இந்நிலையில் கருங்கடல் வண்ணரான கூர்மாவதார மூர்த்தி தன்னிலை இழக்க நேரிடுகின்றது. 

(மச்ச; கூர்ம; வராக; நரசிம்ம அவதாரங்கள் ஒவ்வொன்றிலும், இது போன்றதொரு தன்னிலை இழக்கும் நிகழ்வு குறிக்கப் பெற்றுள்ளது. இவை தற்செயலாக நடந்தேறும் நிகழ்வுகள் அன்று, இதற்கான காரணத்தை விளக்கும் புராணக் குறிப்பொன்றினைப் பிறிதொரு சமயம் சிந்திக்கலாம்). 

(1)
கூர்ம மூர்த்தி, திசைகளின் எல்லைகள் வரையிலும் அலைகள் மேலெழுந்து ஆர்ப்பரிக்குமாறு கடல்களைக் கலக்கத் துவங்குகின்றார், உலகங்கள் அழிவுறும் நிலை உருவாகின்றது. இத்தருணத்தில் திருக்கயிலைப் பரம்பொருளான சிவமூர்த்தி 'நாராயணர் தன்னுடைய காத்தல் தொழிலைத் துறந்தனர் போலும்' என்று தன் திருவுள்ளத்தில் கருதுகின்றார், 

(கந்தபுராணம் - தக்ஷ காண்டம் - ததீசி உத்தரப் படலம் - திருப்பாடல் 25) 
அகந்தை எய்தியே யாவையும் தேற்றலான், அலைபோய்த்
திகந்தம் உற்றிட வேலைகள் உழக்கினன் திரியச்
சகம் தனக்கு அழிவெய்தலும், தனதருள் தன்மை
இகந்தனன் கொலாம் கண்ணன் என்று உன்னினன் எங்கோன்

(2)
மறைமுதல்வரான சிவமூர்த்தி அக்கணமே கூர்ம மூர்த்தியின் முன்னர் எழுந்தருளிச் சென்று, சினந்து நோக்கி, அக்கூர்ம வடிவத்தினைத் தன் திருக்கரங்களால் அழுத்தமாகப் பற்றி, அதன் வலிமையை முற்றிலும் நீக்குகின்றார்,  

(கந்தபுராணம் - தக்ஷ காண்டம் - ததீசி உத்தரப் படலம் - திருப்பாடல் 26) 
அற்றை நாள் அவண் வல்லையில் ஏகியே அரி தன்
முற்றலாமையின் உருவினை நோக்கியே முனிந்து
கற்றை வார்சடைக் கண்ணுதல் யாப்புறக் கரத்தால் 
பற்றி ஆங்கவன் அகந்தையும் வன்மையும் பறித்தான்

(3)
ஆதி மூர்த்தியின் திருச்செயலால் புருஷோத்தமரான திருமால் மெய்யுணர்வு எய்தி, தன் முந்தைய நிலைக்கு மீண்டு, மதி சூடும் அண்ணலாரைப் பணிந்து போற்ற, 'அசுரர்களை மாய்த்து தேவர்களுக்கு அமிர்தத்தை ஈவாய் ஆகுக' என்றருளிச் செய்து சிவபெருமான் மறைந்தருள்கின்றார். இதன் பின்னரே பரந்தாமனாரின் மோகினி அவதாரம் நிகழ்ந்தேறுகின்றது, 

(கந்தபுராணம் - தக்ஷ காண்டம் - ததீசி உத்தரப் படலம் - திருப்பாடல் 27) 
நினைந்து தொல்உருக் கொண்டனன் புகழ்தலும், நிலவைப்
புனைந்த செஞ்சடை நின்மலன் 'அவுணரைப் போக்கி
இனைந்த தேவருக்கு அமிர்தினை ஈக' என ஏக
வனைந்த மேனிமான் மாயையால் அவுணரை மாய்த்தான்

(4)
இந்நிகழ்வின் அடையாளமாய் அம்பிகை பாகத்து இறைவர், கூர்ம மூர்த்தியின் ஓட்டினைத் தன் திருமார்பில் அணிகலனாக அணிந்தருள்கின்றார்,

(கந்தபுராணம் - தக்ஷ காண்டம் - ததீசி உத்தரப் படலம் - திருப்பாடல் 28) 
மாய்த்து வானவர்க்கு அமுதினை நல்கினன் வையம் 
காத்த கண்ணன் என்றுரைப்பரால், அவனுறு கமடம்
மீத்தயங்கிய காப்பினை வாங்கியே விமலன்
சாத்தினான் முனம் அணிந்திடு மருப்புடன் சார

இனி முக்கண் முதல்வர் ஆமையோட்டினை அணிவதற்கான தேவாரக் குறிப்புகளைக் காண்போம்,

(1)
(சம்பந்தர் தேவாரம் - திருக்கொடிமாடச்செங்குன்றூர் - 'வெந்த வெண்ணீறணிந்து' எனும் திருப்பதிகம் - திருப்பாடல் 5)
பொன்திகழ் ஆமையொடு புரிநூல் திகழ்மார்பில்  

(2)
(அப்பர் தேவாரம் - திருமறைக்காடு - 'தேரையும் மேல் கடாவி' எனும் திருப்பதிகம் - திருப்பாடல் 2)
அக்கரவு ஆமை பூண்ட அழகனார்

(3)
(சுந்தரர் தேவாரம் - திருநனிபள்ளி - 'ஆதியன் ஆதிரையன்' எனும் திருப்பதிகம் - திருப்பாடல் 9)
ஏன மருப்பினொடும் எழில்ஆமையும் பூண்டுகந்து

No comments:

Post a Comment