16. திருப்பாசூர்:

சென்னையிலிருந்து சுமார் 40 கி.மீ பயணத் தொலைவிலும், திருவள்ளூர் மற்றும் கடம்பத்தூரிலிருந்து 6 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது திருப்பாசூர். ஞான சம்பந்த மூர்த்தி; நாவுக்கரசு சுவாமிகள் இருவராலும் பாடல் பெற்றுள்ள சிறப்புப் பொருந்தியது. சந்திர தேவன் பூசித்துப் பேறு பெற்றுள்ள தலம், அம்பிகை மற்றும் திருமாலாலும் இத்தல இறைவர் போற்றப் பெற்றுள்ளார் என்று தல புராணம் அறிவிக்கின்றது. 

மூங்கில் காடுகளினூடே பசுவொன்று குறிப்பிட்ட இடத்தில் அனுதினமும் பால்சொரிந்து வழிபட்டு வர, அதுகண்டு அப்பகுதி வேடர்கள் அவ்விடத்தே தோண்ட, பாசூர் இறைவர் சிவலிங்கத் திருமேனியராய் வெளிப்படுகின்றார். செய்தியறிந்து அங்கு வரும் கரிகாலனால் இறைவற்குக் கோயிலொன்று புதுக்கப் பெறுகின்றது. 

விசாலமான திருக்கோயில் வளாகம். மூலக்கருவறைக்குச் செல்லும் வழியில், சிறிய; பெரிய திருமேனியராய் வெவ்வேறு ஒன்பது மூர்த்தங்களில் எழுந்தருளியுள்ள விநாயகர் சபையைத் தரிசிக்கலாம். அருகில் வினை தீர்த்த ஈஸ்வரரும் எழுந்தருளி இருக்கின்றார், இத்திருமேனிகள் ஸ்ரீமகாவிஷ்ணுவின் பிரதிஷ்டை என்பர். கருவறையில் வாசீஸ்வரப் பரம்பொருளின் திருமேனியில் (வேடர்களால்) வெட்டுப் பெற்ற தழும்பு தென்படுகின்றது. 

(சம்பந்தர் தேவாரம் - திருப்பாடல் 1):
சிந்தையிடையார் தலையின் மிசையார் செஞ்சொல்லார்
வந்து மாலை வைகும் போழ்தென் மனத்துள்ளார்
மைந்தா மணாளா என்ன மகிழ்வார் ஊர்போலும்
பைந்தண் மாதவி சோலை சூழ்ந்த பாசூரே

(அப்பர் சுவாமிகள் தேவாரம் - திருப்பாடல் 1):
விண்ணாகி நிலனாகி விசும்புமாகி
    வேலைசூழ் ஞாலத்தார் விரும்புகின்ற
எண்ணாகி எழுத்தாகி இயல்புமாகி
    ஏழுலகும் தொழுதேத்திக் காண நின்ற
கண்ணாகி மணியாகிக் காட்சியாகிக்
    காதலித்தங்கடியார்கள் பரவ நின்ற
பண்ணாகி இன்னமுதாம் பாசூர் மேய
    பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்தவாறே

No comments:

Post a Comment