29. திருஅச்சிறுப்பாக்கம்:

சென்னையிலிருந்து சுமார் 90 கி.மீ பயணத் தொலைவில், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில்; மதுராந்தகத்திற்கு அடுத்து அமைந்துள்ளது அச்சிறுப்பாக்கம் (தற்கால வழக்கில் அச்சரப்பாக்கம்). ஞான சம்பந்தப் பெருமானால் பாடல் பெற்றுள்ள சிறப்புப் பொருந்தியது. 

விசாலமான, நன்கு புனரமைக்கப் பெற்றுள்ள நிலையில் திருக்கோயில் விளங்குகின்றது. பாண்டிய மன்னனொருவன் முல்லைக் கொடிகள் சூழ்ந்திருந்த காட்டில், பொன்னிறமான உடும்போன்றினைக் கண்டு அதனைப் பின்தொடர்ந்து செல்ல, அது அங்கிருந்த சரக்கொன்றை மரமொன்றின் பொந்தில் புகுந்து கொள்கின்றது. அரசனின் ஆணைப்படி ஏவலர் மரத்தை வெட்ட, சிவலிங்கத் திருமேனியோடு ஆட்சீஸ்வரப் பரம்பொருள் வெளிபடுகின்றார். வேந்தன் 'திரிநேத்ரதாரி' எனும் முனிவரிடம் வெளிப்பட்டருளிய இறைவற்கு ஆலயமொன்றினைப் புதுக்குமாறு வேண்டி அதற்கான செல்வங்களையும் சமர்ப்பிக்கின்றான். 

முனிவர் பிரதான மூலவரான சுயம்பு மூர்த்தியை 'ஆட்சீஸ்வரர்' எனும் திருநாமத்துடனும், மற்றுமொரு சிவலிங்கத் திருமேனியை 'உமையாட்சீஸ்வரர்' எனும் திருநாமத்திலும் பிரதிஷ்டை செய்கின்றார். ஆட்சீஸ்வரர் சிறிய திருமேனியர், திருமேனியின் பின்புறம் வெட்டுப் பெற்ற தழும்புள்ளது, நெகிழ்விக்கும் திருக்கோல தரிசனம். உட்பிரகாரச் சுற்றின் பின்புறம் அமைந்துள்ள உமையாட்சீஸ்வர சிவலிங்கத் திருமேனிக்குப் பின்புறம் அம்மையப்பர் திருவுருவத் திருமேனியிலும் எழுந்தருளி இருக்கின்றனர். அகத்தியர் திருமணக்கோலத் திருக்காட்சி பெற்ற தலங்களுள் இதுவுமொன்று. 

சம்பந்தச் செல்வரும் இத்தலத் திருப்பதிகத்தில் மூல மூர்த்தியின் திருநாமத்தைக் குறிக்கும் வண்ணமாய் 'அச்சிறு பாக்கமது ஆட்சி கொண்டாரே' என்று திருப்பாடல்கள் தோறும் போற்றி மகிழ்கின்றார்,  

(சம்பந்தர் தேவாரம் - திருப்பாடல் 2):
தேனினும் இனியர் பாலன நீற்றர் தீங்கரும்பனையர் தம் திருவடி தொழுவார்
ஊனயந்துருக உவகைகள் தருவார் உச்சிமேலுறைபவர் ஒன்றலாதூரார்
வானகமிறந்து வையகம் வணங்க வயங்கொள நிற்பதோர் வடிவினைஉடையார்
ஆனையினுரிவை போர்த்த எம்மடிகள் அச்சிறுபாக்கமது ஆட்சிகொண்டாரே!!!

No comments:

Post a Comment