30. திருவக்கரை:

விழுப்புரம் மாவட்டத்தில், திண்டிவனத்திலிருந்தும் விழுப்புரத்திலிருந்தும் 31 கி.மீ தூரத்திலும், சென்னையிலிருந்து 156 கி.மீ பயணத் தொலைவிலும் அமைந்துள்ளது திருவக்கரை. ஞானசம்பந்தப் பெருமானால் பாடல் பெற்றுள்ள திருத்தலம், மிகவும் விசாலமான திருக்கோயில் வளாகம், இங்கு எழுந்தருளியுள்ள வக்கிரகாளி தேவி மிகவும் பிரசித்தம். நெடுந்தூரம் பயணித்து, திருநந்திதேவரை வணங்கியவாறு உட்சென்று திருக்கருவறையை அடைகின்றோம். சிவலிங்கத் திருமேனியின் அனைத்து திசைகளிலும் திருமுகமொன்று பொருந்தியிருக்க, சந்திரமௌலீஸ்வரப் பரம்பொருள் ஆச்சரியமாய் எழுந்தருளி இருக்கின்றார். காண்பதற்கரிய திருக்காட்சி. 

உட்பிரகாரத்தை வலம் வருகையில், கருவறையின் பின்புறம், வலது புறத்தில் திருப்புகழ் தெய்வமான கந்தக் கடவுள் ஆறு திருமுகங்களும்; பன்னிரு திருக்கரங்களில் ஆயுதங்களுடன், வள்ளி தெய்வயானை தேவியர் உடனிருக்க அதி கம்பீரனாய் எழுந்தருளி இருக்கின்றான். அற்புதத் திருக்கோலம். வெளிப்பிரகாரத்தை வலம் வருகையில் வரதராஜப் பெருமாள் தனிச்சன்னிதியில் பேரழகுத் திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றார். சந்திரமௌலீஸ்வரப் பெருமானின் இடபாகத்தில் கோயில் கொண்டருளும் உமையன்னை வடிவாம்பிகை எனும் திருநாமத்தில் எழுந்தருளி இருக்கின்றாள். 

No comments:

Post a Comment