18. திருக்கள்ளில்:

சென்னையிலிருந்து 44 கி.மீ பயணத் தொலைவிலும், செங்குன்றத்திலிருந்து சுமார் 21 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது திருக்கள்ளில் (தற்கால வழக்கில் திருக்கண்டலம்). ஞான சம்பந்தப் பெருமானால் பாடல் பெற்றுள்ள சிறப்புப் பொருந்தியது. பிருகு முனிவர் பூசித்துப் பேறு பெற்றுள்ளார்.

வயல் வெளிகளினூடே நெடுந்தூரம் பயணித்துச் சென்று ஆலயத்தை அடையலாம். சுற்று வட்டாரத்தில் வெகு தூரத்திற்குக் கடைகளேதும் இல்லை, ஆதலின் அர்ச்சனைப் பொருட்கள்; மாலை இவைகளை வரும் வழியிலேயே சேகரித்து வைத்துக் கொள்ளுதல் நலம். ஓரளவு விசாலமான ஆலய வளாகம், சிவபெருமான் 'சிவானந்தேஸ்வரர்' எனும் திருநாமத்திலும் அம்பிகை ஆனந்தவல்லியாகவும் எழுந்தருளி இருக்கின்றனர். 

முருகப் பெருமானின் திருச்சன்னிதி சோமாஸ்கந்த அமைப்பில் இறைவர்; இறைவி திருச்சன்னிதிகளுக்கு நடுவில் மிகச் சரியாக அமைந்துள்ளது இத்தலத்திற்கே உண்டான தனிச்சிறப்பு. இங்கு எழுந்தருளியுள்ள கந்தக் கடவுளின் திருக்கோலம் தனித்துவமானது, சிவாலயங்களில் வழக்கமாக அமைந்திருப்பதைப் போலல்லாது, நின்ற திருக்கோலத்தில், இருபுறமும் தேவியரின்றி தனியே எழுந்தருளி இருக்கின்றான். பேரழகுத் திருக்கோலம், இம்மூர்த்தியைத் தரிசித்துக் கொண்டே இருக்கலாம்.

(சம்பந்தர் தேவாரம் - திருப்பாடல் 1):
முள்ளின்மேல் முதுகூகை முரலும் சோலை
வெள்ளின்மேல் விடுகூறைக் கொடி விளைந்த
கள்ளில் மேய அண்ணல் கழல்கள்நாளும்
உள்ளுமேல் உயர்வெய்தல் ஒரு தலையே!!!


No comments:

Post a Comment