மகா சிவராத்திரி வழிபாட்டு முறை குறித்த சில சிந்தனைகள்:

மாசி மாதத்தில், தேய்பிறைக் காலமான கிருஷ்ண பட்ச சதுர்த்தசித் திதியின் இரவுப் பொழுதே 'மகா சிவராத்திரி' என்று போற்றப் பெற்று பெறுகின்றது. தனிப்பெரும் தெய்வமான சிவபெருமானின் திருவுள்ளத்துக்கு மிகவும் உகந்த இத்திருநாளன்று நிகழ்த்தப்படும் வழிபாடுகள் 'எண்ணில் கோடி பிறவிகளின் வல்வினைகளை வேரறுக்க வல்லது' என்று புராணங்கள் அறுதியிடுகின்றன.

மாலை 6 மணி துவங்கி, மறு நாள் காலை 6 மணி வரையிலான நான்கு (3 மணி நேர) யாமங்களே சிவராத்திரி வழிபாட்டுக்குரிய காலங்கள். ஆதலின் விரத நாளன்று (அதாவது சனிக்கிழமை) காலைப் பொழுது முதல் மாலை 6 மணி வரையில் (சிறிதளவு) பழங்களை உட்கொள்வது நியம மீறலாகாது. முக்கியமான வழிபாட்டுக் காலங்களில், உடற்சோர்வும் உளச்சோர்வுமின்றி நம்மை முழுமையாய் ஈடுபடுத்திக் கொள்ள இது அவசியமும் கூட. 

மாலை ஆறு மணி முதல் மறுநாள் காலை வரையில் பழ வகைகளையும் அறவே தவிர்த்து விரதமிருத்தல் வேண்டும். தற்பொழுது ஆலய வளாகங்களிலேயே இரவு முழுவதும் பிரசாதம் வினியோகித்து வருகின்றனர், இது புராண சம்பந்தமான வழக்கமன்று. 

நான்கு யாமங்களிலும் கண் விழித்தலோடு சிவ சிந்தையோடு இருத்தலும் மிக அவசியம். இப்புண்ணியக் காலங்களில் ஸ்ரீபஞ்சாட்சர மந்திர ஜபம், திருமுறைப் பாராயணம், சிவாலய தரிசனம்; சிவ புராணங்களை வாசித்தல் மற்றும் சிவகதைகளைப் பேசி மகிழ்ந்திருத்தல் முதலியவை சிறப்பான பலன்களைப் பெற்றுத்தர வல்லவை.

இல்லங்களில் சிவலிங்கத் திருமேனி வைத்து வழிபடும் வழக்கமுள்ளோர், ஒவ்வொரு யாமத்திலும் சிவலிங்க அபிஷேகமும்; சிவ பூஜையும் புரிதல் வேண்டும். பால்; தயிர்; நெய்; தேன்; சர்க்கரை; பஞ்சகவ்யம்; சந்தனம்; பன்னீர் என்று அவரவர்க்கு இயன்ற பொருட்களால் சிவமூர்த்திக்கு அபிஷேகித்து மகிழலாம்.  ஒவ்வொரு ஜாம பூஜையின் முடிவிலும் (அவரவர்க்கு இயன்ற அளவில்) அன்ன வகைகள்; காய்கறி வகைகள், பழங்கள்; இனிப்பு வகைகள் ஆகியற்றை நிவேதனம் புரியலாம். 

பரம புண்ணியமான இச்சிவராத்திரி காலங்களில் இல்லங்களிலுள்ள சிவலிங்கத் திருமேனியை வில்வ இலைகளால் அர்ச்சிப்பதும், திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள சிவமூர்த்திக்கு வில்வ இலைகளையோ; மாலையையோ சமர்ப்பிப்பதும் எண்ணிலடங்கா நற்பலன்களைப் பெற்றுத்தர வல்லது. 

இயல்பாக நம் மனம் செலுத்தும் வழியிலேயே சென்று கொண்டிருக்காமல் அதனை நன்முறையில் இறைச் சிந்தைக்கு மடைமாற்றுதலே 'மகா சிவராத்திரி' நுட்பம். இரவுப் பொழுதில் தமோ குணம் மிகுந்திருக்கும். தமோ குணத்தை வென்று, சிவஞானப் பாதையில் பயணித்து, இறுதியில் சிவமுக்தி பெற்று உய்வு பெறும் உன்னத வழிபாட்டு முறையைக் குறிப்பதே 'மகா சிவராத்திரி' வழிபாடு. 

'மேலைத் தவத்தளவே ஆகுமாம் தான்பெற்ற செல்வம்' என்பாள் அவ்வை. புண்ணியங்களின் உறைவிடமான மகா சிவராத்திரி தினத்தன்று நல்விரதமிருந்து, ஆலமுண்டருளும் ஆதிப் பரம்பொருளான சிவமூர்த்தியைப் போற்றித் துதித்து உய்வு பெறுவோம்.

வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி
    மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி
ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி
    ஓவாத சத்தத்(து) ஒலியே போற்றி
ஆற்றாகி அங்கே அமர்ந்தாய் போற்றி
    ஆறங்கம் நால்வேதம் ஆனாய் போற்றி
காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி
    கயிலை மலையானே போற்றி போற்றி!!!

திருவொற்றியூரில் மாசி மகத் திருநாளன்று நடந்தேறும் அதிசயத் திருமணம் (மகிழடி உற்சவ நிகழ்வு):

ஆண்டுதோறும் மாசி மகத் திருநாளன்று திருவொற்றியூர் தியாகராஜர் திருக்கோயில் வளாகத்தில், தல விருட்சமான மகிழ மரத்திற்கடியில், சுந்தரமூர்த்தி நாயனார் சங்கிலி நாச்சியாருக்கு 'உன்னைப் பிரியேன்' என்று வாக்களிக்கும் நிகழ்வும், அதனைத் தொடர்ந்து திருக்கல்யாண வைபவமும் சிறப்புற நடந்தேறும். நாயன்மார்கள் அனைவரும் தத்தமது உற்சவத் திருமேனிகளில் இவ்விடத்திற்கு எழுந்தருளி வந்து, மண விழாவில் பங்கேற்று மகிழ்வர். கண் கொண்ட பயனாய் நம் சுந்தரனாரின் இவ்வுற்சவத்தினைத் தரிசித்துப் போற்றுவோம்.

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம் - திருப்பாடல் 260)
தாவாத பெருந்தவத்துச் சங்கிலியாரும் காண
மூவாத திருமகிழை முக்காலும் வலம்வந்து
மேவா(து) இங்(கு)யான்அகலேன் எனநின்று விளம்பினார்
பூவார்தண் புனற்பொய்கை முனைப்பாடிப் புரவலனார்.