2. கச்சி மேற்றளி

காஞ்சியில் அமைந்துள்ள தேவாரத் தலங்கள் ஐந்து (கச்சி ஏகம்பம், கச்சி மேற்றளி, ஓணகாந்தன் தளி, கச்சி அனேகதங்காவதம், கச்சிநெறிக் காரைக்க்காடு).

மேற்றளியில் சிவபெருமான் இரு திருச்சன்னிதிகளில் இருவேறு திருநாமங்களில் எழுந்தருளி இருக்கின்றார், ஆதி மூலவர் மேற்றளீஸ்வரர், மற்றொரு திருச்சன்னிதியில் எழுந்தருளியுள்ள 'ஓத உருகீசர்' தற்பொழுது பிரசித்தமாய் போற்றப் பெற்று வருகின்றார். ஞானசம்பந்த மூர்த்தி இத்தலத்திற்கு வருகை புரிந்து பாடுகையில், பாற்கடல் வாசரான ஸ்ரீமகாவிஷ்ணு, முன்னர் சிவமூர்த்தி அருளியிருந்த வண்ணம், தன் திருமேனி முழுவதும் உருகியவராய் ஓத உருகீசரோடு கலந்து சிவ சாரூபம் பெற்றதாக, சிவஞான முனிவர் அருளியுள்ள  காஞ்சிப் புராணத்தின் திருமேற்றளிப் படலம் பதிவு செய்கின்றது (எனினும் சீர்காழிச் செல்வரின் இத்தலத்திற்கான திருப்பதிகம் நமக்கின்று கிடைக்கப் பெறவில்லை). 

அப்பர் சுவாமிகளும் சுந்தரரும் ஓரோர் திருப்பதிகத்தினை அருளிச் செய்துள்ளனர். ஆலயத்திற்கு நேரெதிரே, திருவீதியின் துவக்கத்தில் திருஞானசம்பந்தர் சிறிய தனிக்கோயிலில் இரு கரங்களும் கூப்பிய திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றார். 

3. ஓணகாந்தன் தளி:

காஞ்சியில் அமைந்துள்ள தேவாரத் தலங்கள் ஐந்து (கச்சி ஏகம்பம், கச்சி மேற்றளி, ஓணகாந்தன் தளி, கச்சி அனேகதங்காவதம், கச்சிநெறிக் காரைக்க்காடு). 

பாணாசுரனுடைய சேனாதிபதிகளான ஓணன்; காந்தன் எனும் இருவரும் பூசித்துப் பேறு பெற்றுள்ள தலம். சிவபெருமான் இங்கு ஓணேஸ்வரர்; காந்தேஸ்வரர் எனும் இருவேறு திருக்கோலங்களில், தனிச்சன்னிதிகளில் எழுந்தருளி இருக்கின்றார். ஆலய வளாகத்தில் தனிக்கோயில் போன்றதொரு அமைப்பில் எழுந்தருளியுள்ள சலந்தரேஸ்வர் பிற்காலப் ப்ரதிஷ்டையாகும். சுந்தரர் பொன் பெற்ற தலங்களுள் ஒன்று, தேவார மூவரில் சுந்தரரால் பாடல் பெற்றுள்ள சிறப்புப் பொருந்தியது. இங்கு எழுந்தருளியுள்ள 'வயிறுதாரிப் பிள்ளையாரை' சுந்தரனார் 2ஆம் திருப்பாடலில் குறித்துள்ளார், 

(சுந்தரர் தேவாரம் - திருப்பாடல் 1):
நெய்யும் பாலும் தயிரும் கொண்டு நித்தல் பூசனை செய்யலுற்றார்
கையிலொன்றும் காணமில்லைக் கழலடி தொழுதுய்யினல்லால்
ஐவர் கொண்டிங்காட்ட ஆடி ஆழ்குழிப் !பட்டழுந்துவேனுக்
குய்யுமாறொன்றருளிச் செய்யீர் ஓணகாந்தன் தளியுளீரே!!!



4. கச்சி அனேகதங்காவதம்:

காஞ்சியில் அமைந்துள்ள தேவாரத் தலங்கள் ஐந்து (கச்சி ஏகம்பம், கச்சி மேற்றளி, ஓணகாந்தன் தளி, கச்சி அனேகதங்காவதம், கச்சிநெறிக் காரைக்க்காடு). 

'அனேகதம்' எனும் பதம் யானையைக் குறிக்கும், வேழ முகத்து தெய்வமான நம் விநாயகப் பெருமான் தன் திருக்கரங்களாலேயே சிவலிங்கத் திருமேனியைப் பிரதிஷ்டை செய்து பூசித்த தலமாதலால் அனேகதங்காவதம். சுந்தர மூர்த்தி சுவாமிகளால் பாடல் பெற்ற சிறப்புப் பொருந்தியது. இறைவரின் திருநாமம் அனேகதங்காவதீஸ்வரர், காண்பதற்கரிய பேரழகுத் திருக்கோலம். 

(சுந்தரர் தேவாரம் - திருப்பாடல் 1)
தேனெய் புரிந்துழல் செஞ்சடை எம்பெருமானதிடம்; திகழ் ஐங்கணையக்
கோனை எரித்தெரியாடி இடம்; குலவானதிடம்; குறையா மறையா
மானை இடத்ததொர் கையன் இடம்; மத(ம்) மாறுபடப் பொழியும் மலைபோல்
ஆனையுரித்த பிரானதிடம்; கலிக்கச்சி அனேகதங்காவதமே