எம்பிராட்டி திலகவதியாரைப் போற்றும் நாவுக்கரசு சுவாமிகள் (அப்பர் தேவார நுட்பங்கள் - பகுதி 1):

இளம் பிராய நிகழ்வுகளை முதற்கண் நினைவு கூர்ந்துப் பின்னர் தன் தமக்கையாரின் தவமேன்மைச் சிறப்பினால் 'சிவமூர்த்தியின் திருவருளுக்கு தான் உரியரான நிகழ்வினை' இத்திருப்பாடலில் பதிவு செய்து போற்றுகின்றார் திருத்தாண்டக வேந்தர்,

('கொக்கரை குழல்' என்று துவங்கும் ஆரூர் திருப்பதிகம் - திருப்பாடல் 6) 
எம்மையார்இலை யானும் உளேன்அலேன்
எம்மையாரும் இதுசெய வல்லரே
அம்மை யார் எனக்கென்(று) அரற்றினேற்(கு)
அம்மையாரைத் தந்தார் ஆரூர் ஐயரே!!!

(பொருள்)
இளம் பிராயத்திலேயே தாய்; தந்தையரை இழந்தேன், சிறு வயதினன் ஆதலின் இவ்வுலக வாழ்வைத் தனித்து எதிர்கொள்ளும் திறமின்றி இருந்தனன். எம் தமக்கையார் யாவுமாய் விளங்கி எம்மைக் காத்தருள வல்லவரே, எனினும் அவரும் இச்சமயம் 'தன் இன்னுயிர் துறப்பேன்' என்று துணிந்துள்ளார் (நிச்சயிக்கப் பெற்ற மணமகன் இறந்துபட்ட காரணத்தால்). 

'இனி அம்மையப்பராய் இருந்து எம்மைக் காப்பார் யாருளர்? என்று கதியற்றுப் பதறியிருந்த நேரத்தில், பின்னாளில் எம்மைப் புறச்சமய நெறியினின்றும்  நீக்கிச் சிவமாம் மெய்நெறிக்கு ஆட்படுத்த வேண்டியிருந்த காரணத்தால், திலகவதியாரைத் துறவு நெறியில் செலுத்தி, தாய்;தந்தை; குரு என்று யாவுமாய் விளங்குமாறு மீண்டும் அப்பிராட்டியாரை எமக்கு அளித்தருளினார் ஆரூர் இறையவர்' என்று போற்றுகின்றார் நம் அப்பர் சுவாமிகள். 

எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் நெகிழ்விக்கும் திருப்பாடல் வரிகள் இவை. ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடி போற்றி!!!

திருநாவுக்கரசர் திருப்பாடல்களில் ஆறுமுகக் கடவுள் பற்றிய அற்புதக் குறிப்புகள் (அப்பர் தேவார நுட்பங்கள் - பகுதி 2):

நம் அப்பர் சுவாமிகள் சுமார் 20 முதல் 30 திருப்பாடல்களில் கந்தப் பெருமானைப் பல்வேறு திருநாமங்களால் குறிப்பிட்டு மகிழ்ந்துள்ளார். இவற்றுள் 'நம் கடம்பனை', 'நம் செந்தில் மேய' என்று நெருக்கம் கலந்த உரிமையோடு குறிக்கும் சொற்பிரயோகங்கள் மிக இனிமையானவை, நெகிழ்விக்கக் கூடியவை. இனி இப்பதிவில் கந்தவேளைக் குறிக்கும், இவ்விதமான சிறப்புச் சொல்லாடல்களோடு கூடிய 10 திருப்பாடல்களைச் சிந்தித்து மகிழ்வோம், 

(1) ('வடியேறு திரிசூலம்' என்று துவங்கும் திருப்பூவணம் தேவாரம்: திருப்பாடல் 4)
பன்னிரண்டு கையுடைய பிள்ளை தோன்றும்

(2) ('வேழம்பத்(து) ஐவர்' என்று துவங்கும் திருக்கோழம்பம் தேவாரம் - திருப்பாடல் 10)
சமர சூரபன்மாவைத் தடிந்த வேற்குமரன் தாதை

(3) ('மாசிலொள்' என்று துவங்கும் திருவதிகை தேவாரம் - திருப்பாடல் 5)
விரி நீர்பரவைச் சூரட்ட வேலவன் தாதை

(4) ('மறையணி நாவினானை' என்று துவங்கும் திருப்பெருவேளூர் தேவாரம் - திருப்பாடல் 3)
குறவிதோள் மணந்த செல்வக் குமரவேள் தாதை 

(5) ('மின்னும் சடை'  என்று துவங்கும் திருஅரிசிற்கரைப்புத்தூர் தேவாரம் - திருப்பாடல் 6)
வள்ளி முலைதோய் குமரன் தாதை

(6) ('தூண்டு சுடரனைய' என்று துவங்கும் திருமறைக்காடு தேவாரம் - திருப்பாடல் 4)
நம் செந்தில் மேய வள்ளி மணாளற்குத் தாதை 

(7) ('ஒன்றுகொலாம்' என்று துவங்கும் பொதுப் பதிகம் - திருப்பாடல் 6)
ஆறுகொலாம் அவர்தம் மகனார் முகம்

(8 ) ('அல்லிமலர்' என்று துவங்கும் திருஇன்னம்பர் தேவாரம் - திருப்பாடல் 2)
'கோழிக் கொடியோன்தன் தாதை போலும்'

(9) ('அரவணையான்' என்று துவங்கும் திருவதிகை தேவாரம் - திருப்பாடல் 1)
சரவணத்தான் கைதொழுது சாரும்அடி

(10) ('தளரும் கோளரவத்தோடு' என்று துவங்கும் கடம்பூர் தேவாரம் - திருப்பாடல் 9)
நம் கடம்பனைப் பெற்றவள் பங்கினன்

ரிக் வேதத்தைப் போற்றும் நாவுக்கரசு சுவாமிகள் (அப்பர் தேவார நுட்பங்கள் - பகுதி 3)

சைவம் உள்ளிட்ட அறுவகைச் சமயங்களுக்கும் அடிப்படையாகவும், அடிநாதமாகவும் விளங்குவது (சிவபரம்பொருள் அருளியுள்ள) ரிக்; யஜுர்; சாம அதர்வணமாகிய நால்வேதங்களே. 'வடமொழியில் அமைந்துள்ள இந்நான்கு வேதங்களுக்கும் சைவ சமயத்திற்கும் தொடர்பில்லை' என்பது போன்ற தொடர்ப் பொய்ப் பிரச்சாரங்கள் பல்கிப் பெருகி வரும் இக்கால கட்டத்தில், தக்க அகச் சான்றுகளோடு மீண்டும் மீண்டும் இது குறித்துத் தெளிவுறுத்த வேண்டியது அவசியமாகின்றது. 

'ரிக்' எனும் வடமொழிச் சொல்லை 'ருக்' என்று தமிழாக்கியும், (ராமனை 'இராமன்' என்று எழுதுமாற் போல), ருக் வேதத்தை 'இருக்கு வேதம்' எனும் சொல்லாடலோடு நம் அருளாளர்கள் தத்தமது பாடல்களில் கையாண்டு வந்துள்ளனர்.  

இனி இப்பதிவில் நம் அப்பர் சுவாமிகள் ரிக் வேதத்தினைச் சிறப்பித்துப் போற்றும் திருப்பதிகப் பாடல்களை அறிந்துணர்ந்து போலிப் பிரச்சாரங்களைப் புறந்தள்ளுவோம், 

(1) ('மறையும் ஓதுவர்' என்று துவங்கும் 'திருப்பேரெயில்' தேவாரம் - திருப்பாடல் 6)
திருக்கு வார்குழல் செல்வன சேவடி
இருக்கு வாய்மொழியால் தனைஏத்துவார்
சுருக்குவார் துயர் தோற்றங்கள் ஆற்றறப்
பெருக்குவார்அவர் பேரெயிலாளரே
-
(குறிப்பு: பேரெயிலில் எழுந்தருளியுள்ள சிவமூர்த்தி 'ரிக் வேத மந்திரங்களால் தொழுவோரின்' துயர்களைப் போக்கியருள்வார் என்று அப்பர் சுவாமிகள் பதிவு செய்கின்றார்)

(2) ('சிட்டனைச் சிவனை' என்று துவங்கும் 'திருப்பாண்டிக்கொடுமுடி' தேவாரம் - திருப்பாடல் 5)
நெருக்கி அம்முடி நின்றிசை வானவர்
இருக்கொடும் பணிந்தேத்த இருந்தவன்
திருக்கொடும்முடி என்றலும் தீவினைக்
கருக்கெடும்இது கைகண்ட யோகமே
-
(குறிப்பு: 'விண்ணுறைத் தேவர்கள் கூட்டமாக நின்று ரிக் வேத மந்திரங்களால் பணிந்தேத்தும் தன்மையில், திருபாண்டிக்கொடுமுடி இறைவர் எழுந்தருளி இருக்கின்றார்' என்று போற்றுகின்றார் நம் அப்பர் பெருமானார்)

(3) ('கடலகம் ஏழினோடும்' என்று துவங்கும் 'திருஆப்பாடி' தேவாரம் - திருப்பாடல் 3) 
எண்ணுடை இருக்குமாகி இருக்கினுள் பொருளுமாகிப்
பண்ணொடு பாடல் தன்னைப் பரவுவார் பாங்கராகிக்
கண்ணொரு நெற்றியாகிக் கருதுவார் கருதலாகாப்
பெண்ணொரு பாகமாகிப் பேணும் ஆப்பாடியாரே
-
(குறிப்பு: 'ரிக் வேத சுவரூபமாகவும் அவ்வேதம் சுட்டும் முதற்பொருளாகவும் திருஆப்பாடி இறைவர் விளங்குகின்றார்' என்று சிறப்பிக்கின்றார் நம் தாண்டக வேந்தர்)

(4) ('தொண்டனேன்' என்று துவங்கும் பொதுப் பதிகம் - திருப்பாடல் 1)
தொண்டனேன் பட்டதென்னே தூயகாவிரியி(ல்) நன்னீர்
கொண்(டு) இருக்கோதி ஆட்டிக் குங்குமக் குழம்பு சாத்தி
இண்டை கொண்டேற நோக்கி ஈசனை எம்பிரானைக்
கண்டனைக் கண்டிராதே காலத்தைக் கழித்தவாறே!!!
-
(குறிப்பு: 'ரிக் வேத மந்திரங்களால் போற்றியவாறு சிவலிங்கத் திருமேனிக்கு தீர்த்த நீராட்டாமல் காலத்தைப் போக்கினேனே' என்று வருந்திப் பாடுகின்றார் நம் நாவுக்கரசு சுவாமிகள்)

(5) ('பொருப்பள்ளி' என்று துவங்கும் பொதுப் பதிகம் - திருப்பாடல் 5)
பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும்
    பெருங்கோயில் எழுபதினோ(டு) எட்டும் மற்றும் 
கரக்கோயில் கடிபொழில்சூழ் ஞாழற் கோயில்
    கருப்பறியல் பொருப்பனைய கொகுடிக் கோயில்
இருக்கோதி மறையவர்கள் வழிபட்டேத்தும்
    இளங்கோயில் மணிக்கோயில் ஆலக்கோயில்
திருக்கோயில் சிவனுறையும் கோயில் சூழ்ந்து
    தாழ்ந்திறைஞ்சத் தீவினைகள் தீரும் அன்றே!!!
-
(குறிப்பு: சிவபெருமான் எழுந்தருளியுள்ள கோயில் வகைகளைப் பட்டியலிடும் நம் அப்பர் சுவாமிகள், 'மறையவர்கள் ரிக் வேத மந்திரங்களை ஓதி வழிபடும் இடம் இளங்கோயில்' என்று இத்திருப்பாடலில் பதிவு செய்கின்றார்)

(6) ('வேத நாயகன்' என்று துவங்கும் பொதுப் பதிகம் - திருப்பாடல் 8 )
அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில்
அருக்கனாவான் அரனுரு வல்லனோ
இருக்கு நான்மறை ஈசனையே தொழும்
கருத்தினை நினையார் கல் மனவரே!!!
-
(குறிப்பு: இத்திருப்பாடலில் 'ரிக் முதலான நான்மறைகள்' என்று ஐயத்திற்குச் சிறிதும் இடமின்றி சைவ சமய அன்பர்களுக்கு நம் அப்பர் அடிகள் தெளிவுறுத்துகின்றார்) 

ஷேத்திரங்களின் திருப்பெயர்களைப் பாராயணம் புரிவதால் விளையும் நற்பலன்கள் (அப்பர் தேவார நுட்பங்கள் - பகுதி 4)

'பிதற்றாய் பிறைசூடி தன் பேரிடமே' என்று ஷேத்திரக் கோவையில் ஞானசம்பந்த மூர்த்தி அறிவுறுத்துகின்றார். அம்முறையில் நம் அப்பர் சுவாமிகளும் சிவத்தலங்களின் திருப்பெயர்களைப் போற்றுவதன் மேன்மையையும், அதனால் விளையும் அளவிலா நற்பலன்களையும் பின்வரும் அற்புத அற்புத திருப்பாடல் வரிகளால் பட்டியலிடுகின்றார், 

(1) ('நேர்ந்தொருத்தி ஒருபாகத்(து)' என்று துவங்கும் பொதுத் திருப்பதிகத்தில் இடம்பெறும் முதல் 9 திருப்பாடல்களின் இறுதி இரு வரிகள்)

பூந்துருத்தி பூந்துருத்தி என்பீராகில்
    பொல்லாப் புலால் துருத்தி போக்கலாமே

நெய்த்தானம் நெய்த்தானம் என்பீராகில்
நிலாவாப் புலால்தானம் நீக்கலாமே

ஐயாறே ஐயாறே என்பீராகில்
அல்லல் தீர்ந்தமருலகம் ஆளலாமே.

பழனம் பழனமே என்பீராகில்
பயின்றெழுந்த பழவினைநோய் பாற்றலாமே.

சோற்றுத்துறை சோற்றுத்துறை என்பீராகில்
துயர்நீங்கித் தூநெறிக்கண் சேரலாமே

வலஞ்சுழியே வலஞ்சுழியே என்பீராகில்
வல்வினைகள் தீர்ந்து வான்ஆளலாமே

கண்டியூர் கண்டியூர் என்பீராகில் 
கடுகநும் வல்வினையைக் கழற்றலாமே

குடமூக்கே குடமூக்கே என்பீராகில் 
கொடுவினைகள் தீர்ந்தரனைக் குறுகலாமே

வெண்காடே வெண்காடே என்பீராகில்
வீடாத வல்வினை நோய் வீட்டலாமே

(2) ('மட்டுவார் குழலாளொடு' என்று துவங்கும் திருச்சிராப்பள்ளி தேவாரம் - திருப்பாடல் 3)
அரிச்சிராப் பகல் ஐவரால் ஆட்டுண்டு
சுரிச்சிராது நெஞ்சே ஒன்று சொல்லக்கேள்
திருச்சிராப்பள்ளி என்றலும் தீவினை
நரிச்சிராது நடக்கும் நடக்குமே
-
(குறிப்பு: 'திருச்சிராப்பள்ளி' எனும் திருப்பெயரினைக் காதலோடு போற்றுவோரின் தீவினைகள் (அத்தலத்துறை இறைவரான தாயுமான சுவாமியின் பேரருளால்) வேரோடு அழிந்துபடும். இது சத்தியம்; சத்தியமே என்று அறுதியிட்டுக் கூறுகின்றார்.

இராவணன் சிவ பக்தனா? (அப்பர் தேவார நுட்பங்கள் - பகுதி 5)

முதற்கண் இராவணன் பரம்பொருளான சிவபெருமானைக் குறித்து தவம் மேற்கொண்டு வரங்களைப் பெற்றவன் அல்லன், படைப்புக் கடவுளான பிரமனை வேண்டித் தவமிருந்து வரங்களைப் பெற்றவன். இதனைப் பின்வரும் திருப்பாடலில் 'அயன் அருளினில்' என்று ஞானசம்பந்த மூர்த்தி குறிக்கின்றார்,
-
(சம்பந்தர் தேவாரம் - 'புவம்வளி' என்று துவங்கும் திருச்சிவபுரப் பதிகம் - திருப்பாடல் 8 )
அசைவுறு தவ முயல்வினில் அயன் அருளினில் வருவலி கொடுசிவன்
இசை கயிலையை எழுதருவகை இருபது கரம்அவை நிறுவிய 
நிசிசரன்.. 

இனி இப்பதிவில் நம் அப்பர் சுவாமிகள் இராவணன் தொடர்பாகப் பதிவு செய்துள்ள முக்கியக் குறிப்புகளையும் உணர்ந்து தெளிவுறுவோம், 

(1)

இராவணன் புஷ்பக விமானத்தில் விண்ணில் செல்லுகையில், திருக்கயிலை மலை எதிர்ப்பட, தேர் தடைப்பட்டு நிற்கின்றது. 'ஆதிப்பரம்பொருள் எழுந்தருளியுள்ள திருமலை' என்று ஒருசிறிதும் அச்சமின்றி, 'நான் முன்னேறிச் செல்ல இம்மலை தடை செய்வதோ?' என்று கடும் ஆணவத்துடன் அதனைப் பெயர்க்க முனைகின்றான். இதுவோ சிவபக்தியின் குறியீடு? 

'பெற்ற வரபலத்தினால், அறிவில்லாமல் திருக்கயிலை மலையைப் பெயர்க்க முயன்றான் இராவணன்' என்று அப்பர் சுவாமிகள் பின்வரும் திருப்பாடலில் சாடுகின்றார்,
-
('பன்னிய செந்தமிழ்' என்று துவங்கும் திருஎறும்பியூர் தேவாரம் - திருப்பாடல் 10)
அருந்தவத்தின் பெருவலியால் அறிவதின்றி
அடலரக்கன் தடவரையை எடுத்தான் 

(2)

'இறைவரும் இறைவியும் எழுந்தருளியுள்ள திருமலை' என்று ஒருசிறிதும் மதியாது 'அம்மலையைப் பெயர்க்க முயன்றான் இராவணன்' என்று பின்வரும் திருப்பாடலில் அப்பர் அடிகள் பதிவு செய்கின்றார்,
-
('வடிவுடை மாமலை' என்று துவங்கும் திருநாகைக்காரோண தேவாரம் - திருப்பாடல் 9)
கருந்தடம் கண்ணியும் தானும் கடல்நாகைக் காரோணத்தான்
இருந்த திருமலை என்றிறைஞ்சா(து) அன்றெடுக்கலுற்றான்

(3)

'எண்தோளானே எம்பெருமான் என்றேத்தா இராவணன்' என்று 'இராவணன் இந்நிகழ்வு வரையில் சிவபெருமானிடத்து பக்தி கொண்டிருந்தவன் அல்லன்' என்று அப்பர் சுவாமிகள் தெளிவுறுத்துகின்றார்,
-
('தோற்றினான் எயிறு கவ்வி' என்று துவங்கும் திருநெய்த்தான தேவாரம் - திருப்பாடல் 10)
...எண்தோளானே
எம்பெருமான் என்றேத்தா இலங்கைக் கோனை
நெரித்தானை நெய்த்தானம் மேவினானை

(4)

'இராவணன் நேர்மையற்றவன்; நன்மை அறியாதவன்' என்று பின்வரும் திருப்பாடல்களில் அப்பர் சுவாமிகள் பதிவு செய்கின்றார்,
-
('தோற்றினால் எயிறு கவ்வி' என்று துவங்கும் திருஅவளிவணல்லூர் தேவாரம்)
நிலைவலம் வல்லன் அல்லன் நேர்மையை நினைய மாட்டான் (திருப்பாடல் 4)
நன்மை தான் அறிய மாட்டா(ன்) நடுவிலா அரக்கர் கோமான் (திருப்பாடல் 6) 

(5)

('தேரையு(ம்) மேல் கடாவி' என்று துவங்கும் திருமறைக்காடு தேவாரம்)
வலியன்என்று பொத்திவாய் தீமை செய்த பொருவலி அரக்கர்கோன் (திருப்பாடல் 7)
மிக்கமா மதிகள் கெட்டு வீரமும் இழந்தவாறே (திருப்பாடல் 8 )

(இறுதிக் குறிப்பு)
பின்னாளில் இராவணன் கைக்கொண்ட சிவபக்தியானது '1000 வருடங்கள் திருக்கயிலை மலைக்கடியில் சிக்குண்ட அச்சத்தின் வெளிப்பாடே', அன்றி அது சிவபெருமானிடத்து உள்ள அன்பினால் இயல்பாகத் தோன்றிய பக்தி அன்று. வலி பொறுக்க இயலாமல்; இசைபாடி மன்னிப்பு வேண்டிப் பாடியதால், கருணைக் கடலான சிவமூர்த்தி திருவுள்ளம் கனிந்து (அவனுடைய இக்குற்றத்தை மட்டும் மன்னித்து) நாளும் வாளும் தந்தருள் புரிகின்றார்.

அம்பிகையின் ஊடல் போக்க சிவபெருமான் செய்வது என்ன? (அப்பர் தேவார நுட்பங்கள் - பகுதி 6)

உலகியலில் ஒவ்வொருவரும், காதலி அல்லது மனைவி கொண்டிருக்கும் ஊடலைப் போக்க ஓரோர் வகையினைக் கைக்கொள்வர். அம்முறையில் நம் உமையன்னை பரம்பொருளான தன் மணாளரோடு ஊடல் கொள்ளும் சமயங்களில், இறைவர் அதனை எவ்விதம் போக்கியருள்வார்? இதற்கான விடையை நம் அப்பர் சுவாமிகளின் பின்வரும் திருப்பாடலில் பகர்கின்றார்.
-
முக்கண் முதல்வர் கங்கையெனும் நங்கையைத் தன் திருமுடியில் சூட்டிய காரணத்தினால் உலகீன்ற உமையவள் வாட்டமுற்று ஊடல் கொள்கின்றனளாம். உடன் நம் இறைவர் (நால்வேதங்களுள் ஒன்றான) சாமவேதத்தினை இதமாக; இனிமையாகப் பாடிப் பின்னர் அவ்விசையின் தன்மைக்கேற்பத் திருநடமும் புரிந்தருள, நம் அம்மை அக்கணமே ஊடல் நீங்கியவளாய் திருவுள்ளம் மகிழ்கின்றாளாம். 
-
('மடக்கினார் புலியின்' - திருவதிகை தேவாரம் - திருப்பாடல் 2)
சூடினார் கங்கையாளைச் சூடிய துழனி கேட்டங்(கு)
ஊடினா(ள்) நங்கையாளும், ஊடலை ஒழிக்க வேண்டிப்
பாடினார் சாம வேதம் பாடிய பாணியாலே
ஆடினார் கெடிலவேலி அதிகை வீரட்டனாரே
*
இனி இப்பதிவில் அம்பிகை காணுமாறு ஐயன் ஆடிய திருக்கோலத்தினை விளக்கும் சில அற்புதத் திருப்பாடல்களையும் சிந்தித்து மகிழ்வோம்,
-

(1)

'அஞ்சொலாள் காண நின்று அழகநீ ஆடுமாறே' என்று இத்திருப்பாடலில் சுவாமிகள் போற்றுகின்றார்,
-
('பத்தனாய்ப் பாட மாட்டேன்' - தில்லை தேவாரம் - திருப்பாடல் 9)
நெஞ்சினைத் தூய்மை செய்து நினைக்குமா நினைப்பியாதே
வஞ்சமே செய்தியாலோ வானவர் தலைவனேநீ
மஞ்சடை சோலைத் தில்லை மல்கு சிற்றம்பலத்தே
அஞ்சொலாள் காண நின்று அழகநீ ஆடுமாறே

(2)

'குயிலாரும் மென்மொழியாள் குளிர்ந்து நோக்கக் கூத்தாடவல்ல குழகர் போலும்' என்று இத்திருப்பாடலில் சுவாமிகள் பணிந்தேத்துகின்றார்,
-
('மானேறு கரமுடைய' - திருவீழிமிழலை தேவாரம் - திருப்பாடல் 11)
கயிலாய மலையெடுத்தான் கதறி வீழக்
கால்விரலால் அடர்த்தருளிச் செய்தார் போலும்
குயிலாரும் மென்மொழியாள் குளிர்ந்து நோக்கக் 
கூத்தாடவல்ல குழகர் போலும்
வெயிலாய சோதி விளக்கானார் போலும்
வியன்வீழி மிழலைஅமர் விகிர்தர் போலும்
அயிலாரும் மூவிலைவேல் படையார் போலும்
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே

(3)

'இவர்ஆடுமாறும் இவள் காணுமாறும் இதுதான் இவர்க்கொர் இயல்பே' என்று இத்திருப்பாடலில் குறிக்கின்றார்,
-
('சிவனெனும் ஓசை' - பொதுப் பதிகம் - திருப்பாடல் 3)
தேய்பொடி வெள்ளை பூசி அதன்மேலொர் திங்கள் திலகம் பதித்த நுதலர்
காய்கதிர் வேலை நீல ஒளிமா மிடற்றர்; கரிகாடர்; காலொர் கழலர்
வேயுடனாடு தோளியவள் விம்ம வெய்ய மழுவீசி வேழஉரி !போர்த்
தேஇவர்ஆடுமாறும் இவள் காணுமாறும் இதுதான் இவர்க்கொர் இயல்பே

(4)

இத்திருப்பாடலில் 'காம்பாடு தோள்உமையாள் காண நட்டம்  கலந்தாடல் புரிந்தவன் காண்' என்று '(மூங்கிலனைய திருத்தோள்களை உடைய) உமையன்னை காண இறைவர் திருநடம் புரியும்' மாண்பினைச் சுட்டுகின்றார் சுவாமிகள், 
-
('புரிந்தமரர் தொழுதேத்தும்' - திருப்புத்தூர் தேவாரம் - திருப்பாடல் 6)
காம்பாடு தோள்உமையாள் காண நட்டம் 
கலந்தாடல் புரிந்தவன்காண்; கையில் வெய்ய
பாம்பாடப் படுதலையில் பலிகொள்வோன் காண்
பவளத்தின் பருவரைபோல் படிவத்தான் காண்
தாம்பாடு சினவிடையே பகடாக் கொண்ட
சங்கரன் காண்; பொங்கரவக் கச்சையோன் காண்
சேம்பாடு வயல்புடைசூழ் திருப்புத்தூரில்
திருத்தளியான் காண் அவனென் சிந்தையானே

சிவபெருமானை நம் வாழ்நாளிலேயே நேரில் தரிசிக்க எளியதொரு வழிமுறை (அப்பர் தேவார நுட்பங்கள் - பகுதி 7)

தனிப்பெரும் தெய்வமான சிவபரம்பொருளை நேரிலேயே தரிசிக்க, யாவராலும் கைக்கொள்ளக் கூடிய ஆச்சரியமான எளிய வழிமுறை ஒன்றினை நம் அப்பர் சுவாமிகள் பின்வரும் திருப்பாடலில் வெளிப்படுத்துகின்றார்.

(1)
திருப்பாடலின் இறுதி இரு வரிகளை முதற்கண் சிந்திப்போம், சிவமூர்த்தியின் திருநாமத்தினை ஓதியவாறே அப்பெருமானைப் பலகாலம் தொடர்ந்து 'ஐயனே, என்றேனும் என் முன்னர் தோன்றி அருள மாட்டாயோ?' என்று உளமுருகி உறுதி மாறாது அழைத்துக் கொண்டே இருந்தால், 'இவன் நம்மைப் பலகாலம் இடைவிடாது அழைக்கின்றானே' என்று அக்கருணா மூர்த்தி திருவுள்ளம் மிக இரங்கி, நம்முன் வெளிப்பட்டுத் தோன்றுவாராம். 

('வெள்ளிக் குழைத்துணி போலும்' என்று துவங்கும் பொதுத் திருப்பதிகம் - திருப்பாடல் 9)
சிவனெனு(ம்) நாமம் தனக்கே உடைய செம்மேனி எம்மான்
அவனெனை ஆட்கொண்(டு) அளித்திடுமாகில், அவன்தனை யான்
பவனெனு(ம்) நாமம் பிடித்துத் திரிந்து பன்னாள் அழைத்தால்,
இவன்எனைப் பன்னாள் அழைப்பொழியான் என்(று) எதிர்ப்படுமே

'நாமம் பிடித்துத் திரிந்து' எனும் சுவாமிகளின் திருவாக்கிற்கு 'திருஐந்தெழுத்தான ஸ்ரீபஞ்சாட்சர ஜபம் மற்றும் திருமுறைப் பாராயணம்' என்று பொருள் கொள்வது சிறப்பு. 

அருமையான நெகிழ்விக்கும் வழிமுறை! இதற்குப் பிரமாணம் கூறுவது திருத்தொண்டின் தனியரசரான நம் அப்பர் சுவாமிகளன்றோ!! இன்றே அதற்கான முயற்சியினைத் துவங்குவோமா?

4ஆம் திருமுறையில் தட்சிணாமூர்த்தியின் திருநாமம் (அப்பர் தேவார நுட்பங்கள் - பகுதி 8 )

பிரம்ம புத்திரர்களான சனகர்; சனாதனர்; சனற்குமாரர்; சனந்தனர் ஆகியோர் பொதுவில் சனகாதியர் என்று குறிக்கப் பெறுவர். இந்நால்வர்க்கும் சிவபரம்பொருள் தென்திசை நோக்கி எழுந்தருளி இருந்து, சின்முத்திரையுடன் ரிக்; யஜுர்; சாம; அதர்வண வேத சாரங்களை உபதேசித்து அருளிய புராதன நிகழ்வினை நம் நாவுக்கரசு சுவாமிகள் பல்வேறு திருப்பாடல்களில் பதிவு செய்து போற்றியுள்ளார். 

(1)
(திருக்கச்சி ஏகம்ப தேவாரம்: 'கரவாடும் வன்னெஞ்சர்க்(கு) அரியானை' - திருப்பாடல் 4)
விரித்தானை நால்வர்க்கு வெவ்வேறு வேதங்கள்

(2)
(திருமால்பேறு தேவாரம்: 'பொருமாற்றின்படை' - திருப்பாடல் 2)
ஆலத்தார் நிழலில்அற நால்வர்க்குக்
கோலத்தால் உரை செய்தவன்

(3)
(திருநல்லூர் தேவாரம்: 'நினைந்துருகும் அடியாரை' - திருப்பாடல் 4)
சொல்லருளி அறம் நால்வர்க்(கு) அறிய வைத்தார்

இவ்வுபதேச நிகழ்வினை குறிக்கும் திருப்பாடல் வரிகள் யாவுமே, இறைவரின் திருநாமமின்றிப் பொதுவான தன்மையிலேயே அமைக்கப் பெற்றிருக்கும். எனினும் அரிதினும் அரிதாகப் பின்வரும் திருவதிகை தேவாரத் திருப்பாடலில் 'தக்கணா போற்றி' என்று நம் சுவாமிகள் அருளிச் செய்துள்ளது எண்ணி இன்புறத் தக்கதொரு குறிப்பாகும்,  

(திருவதிகை தேவாரம்: 'எல்லாம் சிவனென்ன நின்றாய் போற்றி' - திருப்பாடல் 10) 
முக்கணா போற்றி முதல்வா போற்றி
    முருகவேள் தன்னைப் பயந்தாய் போற்றி
தக்கணா போற்றி தருமா போற்றி
    தத்துவனே போற்றிஎன் தாதாய் போற்றி
தொக்கணா என்றிருவர் தோள்கை கூப்பத்
    துளங்கா(து) எரிசுடராய் நின்றாய் போற்றி
எக்கண்ணும் கண்ணிலேன் எந்தாய் போற்றி
    எறிகெடில வீரட்டத்(து) ஈசா போற்றி

பிட்டுக்கு மண் சுமந்த பரம்பொருள் (அப்பர் தேவார நுட்பங்கள் - பகுதி 9)

'வந்தி' எனும் மூதாட்டிக்கு அருளும் பொருட்டு சோமசுந்தரப் பெருங்கடவுள் 'பிட்டுக்கு மண் சுமந்து சென்ற' அற்புதத் திருவிளையாடலை நம் அப்பர் பெருமானார் 'வைகைத் திருக்கோட்டில் நின்றதோர் திறமும் தோன்றும்' என்று பின்வரும் திருப்பூவணத் திருப்பாடலில் போற்றியுள்ளார். மணிவாசகப் பெருந்தகையார் அப்பர் சுவாமிகளின் அவதாரக் காலத்திற்கு மிக முற்பட்டவர் என்பதற்கு இத்திருப்பாடல் வரிகள் மற்றுமோர் அகச் சான்று.

(திருப்பூவண தேவாரம்: 'வடியேறு திரிசூலம் தோன்றும் தோன்றும்' - திருப்பாடல் 9)
அருப்போட்டு முலைமடவாள் பாகம் தோன்றும்
    அணிகிளரும் உருமென்ன அடர்க்கும் கேழல்
மருப்போட்டு மணிவயிரக் கோவை தோன்றும்
    மணமலிந்த நடம்தோன்றும்; மணியார் வைகைத்
திருக்கோட்டில் நின்றதோர் திறமும் தோன்றும் 
    செக்கர்வான் ஒளிமிக்குத் திகழ்ந்த சோதிப்
பொருப்போட்டி நின்றதிண் புயமும் தோன்றும்
    பொழில்திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே

நரி பரியாக்கிய படலம் (அப்பர் தேவார நுட்பங்கள்- பகுதி 10)

சோமசுந்தரக் கடவுள் மணிவாசகப் பெருமானின் பொருட்டு நரிகளைப் பரிகளாக்கி நிகழ்த்தியருளிய அற்புதத் திருவிளையாடலை நம் அப்பர் சுவாமிகள் பின்வரும் இரு திருப்பாடல்களில் பதிவு செய்து போற்றியுள்ளார், 

(1)
('கரைந்து கை தொழுவாரையும்' - திருவீழிமிழலை தேவாரம் - திருப்பாடல் 8)
எரியினார் இறையார் இடுகாட்டிடை
நரியினார் பரியா மகிழ்கின்றதோர்
பெரியனார் தம் பிறப்பொடு சாதலை
விரியினார் தொழும் வீழி மிழலையே

(2)
('பாடிளம் பூதத்தினானும்' - திருவாரூர் தேவாரம் - திருப்பாடல் 2)
நரியைக் குதிரை செய்வானும்; நரகரைத் தேவு செய்வானும்
விரதம் கொண்டாட வல்லானும்; விச்சின்றி நாறு செய்வானும்
முரசதிர்ந்(து) ஆனை முன்னோட முன்பணிந்(து) அன்பர்களேத்த
அரவரைச் சாத்தி நின்றானும் ஆரூர் அமர்ந்த அம்மானே

தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம் (அப்பர் தேவார நுட்பங்கள் - பகுதி 11)

திருஆலவாய் எனும் மதுரை ஷேத்திரத்தில், எளிய ஆதிசைவ இளைஞரான தருமி எனும் அடியவருக்குப்  பாண்டிய வேந்தன் பரிசறிவித்த பொற்கிழியை உரித்தாக்கும் பொருட்டு, சோமசுந்தரப் பெருங்கடவுள் புரிந்தருளிய அற்புதத் திருவிளையாடலை நம் அப்பர் சுவாமிகள் பின்வரும் திருப்பாடலில் பதிவு செய்து போற்றுகின்றார்,

('புரிந்தமரர் தொழுதேத்தும்' என்று துவங்கும் திருப்புத்தூர் தேவாரம் - திருப்பாடல் 3)
மின்காட்டும் கொடி மருங்குல் உமையாட்கென்றும்
விருப்பவன்காண்; பொருப்பு வலிச்சிலைக் கையோன் காண்
நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி
நற்கனகக் கிழி தருமிக்(கு) அருளினோன் காண்

பொன்காட்டக் கடிக்கொன்றை மருங்கே நின்ற
புனக்காந்தள் கைகாட்டக் கண்டு வண்டு
தென்காட்டும் செழும்புறவின் திருப்புத்தூரில்
திருத்தளியான் காண்; அவனென் சிந்தையானே!!!

நாவுக்கரசு சுவாமிகள் தேவாரத்தில் திருஞானசம்பந்தர் பற்றிய அற்புதக் குறிப்புகள் (அப்பர் தேவார நுட்பங்கள் - பகுதி 12)

(1)
திருவாவடுதுறை தலத்தில் சம்பந்த மூர்த்தி எழுந்தருளியிருந்த சமயத்தில், தந்தையாரான 'சிவபாத இருதயர்' அங்கு வருகை புரிந்து, 'சீகாழியில் சிவவேள்வி புரிதற்குப் பொருட்தேவை உள்ளதென்று' புகல்கின்றார். சிவஞானச் செல்வர் ஆவடுதுறை ஆலயத்துள் இறைவரின் திருமுன்பு சென்று, பொன் வேண்டும் குறிப்புடன் 'இடரினும் தளரினும்' எனும் பாமாலையால் போற்றி செய்து விண்ணப்பிக்கின்றார். உடன் சிவபூதகணமொன்று  அங்கு தோன்றி, அங்குள்ள பலிபீடத்தில் 1000 பொன் அடங்கிய முடிப்பினை வைத்து, 'இது இறைவர் உமக்கருள் செய்தது' என்றுரைத்து மறைகின்றது. 

நம் அப்பர் சுவாமிகள் இவ்வரிய நிகழ்வினை 'கழுமல ஊரர்க்(கு) அம்பொன் ஆயிரம் கொடுப்பர் போலும் ஆவடுதுறையனாரே' என்று பதிவு செய்து போற்றுகின்றார்,

(திருவாவடுதுறை தேவாரம் - திருப்பாடல் 1)
மாயிரு ஞாலமெல்லா(ம்) மலரடி வணங்கும் போலும்
பாயிரும் கங்கையாளைப் படர்சடை வைப்பர் போலும்
காயிரும் பொழில்கள் சூழ்ந்த கழுமல ஊரர்க்(கு) அம்பொன்
ஆயிரம் கொடுப்பர் போலும் ஆவடுதுறையனாரே

(2)
மற்றொரு சமயம் அப்பர் சுவாமிகள் ஞானசம்பந்த மூர்த்தியுடன் திருமறைக்காட்டிற்கு எழுந்தருளிச் செல்லுகையில், அங்கு பன்னெடுங்காலமாய்த் திறவாதிருந்த ஆலயத்தின் பிரதான வாயிற் கதவினைச் சுவாமிகள் திறக்கப் பாடுகின்றார். வழிபாடு நிறைவுற்ற பின்னர், சம்பந்தச் செல்வர், நெடுநாள் திறவாதிருந்த தன்மை சீர்பெறும் பொருட்டு மீண்டுமொரு முறை அடைப்பிக்கப் பாடுகின்றார். 

அன்றிரவு துயில் கொள்ளுகையில், திருவாய்மூர் மேவும் தேவதேவர் சுவாமிகளின் கனவில் தோன்றி, 'நம் வாய்மூருக்கு வருக' என்றருள் புரிகின்றார். அந்நள்ளிரவு வேளையில் சுவாமிகள் பெரும் ஆர்வத்துடன் வாய்மூருக்கு விரைந்து செல்கின்றார். வழிதோறும் வாய்மூர் முதல்வர் ஆங்காங்கே தோன்றுவதும் மறைவதுமாய்த் திருவிளையாடல் புரிந்தருளி, அங்குள்ள ஆலயத்துள் புகுந்து மறைகின்றார். 

இந்நிகழ்வினைப் பின்னர் அறியப் பெறும் சம்பந்தப் பெருமானார் 'இவ்வேளையில் சுவாமிகள் சென்றிருக்கும் காரணம் தான் யாதோ?' என்றெண்ணியவாறு அவ்வழியிலேயே தாமும் பின்தொடர்ந்து செல்கின்றார். அங்கு சிவதரிசனம் கிட்டாது பரிதவித்து நின்றிருந்த சுவாமிகள் 'ஐயனே, உன் திருவுளம் அறியாது; காலமற்ற காலத்தில் ஆலயக் கதவினைத் திறப்பித்த அடியேனுக்கு நீர் உம்மை மறைத்தருளியது முறையே! எனினும் அடியேனின் அத்தவறினை சீர்செய்யும் பொருட்டு, மணிக்கதவை முறையாக அடைப்பித்த உம்முடைய சீகாழிச் செல்வர் இங்கு எழுந்தருளி வந்துள்ளார். இனியும் நீர் மறைந்தருள இயலுமோ?' என்று நயம்படப் பாடுகின்றார், 

(திருவாய்மூர் தேவாரம்: 'எங்கேயென்னை' - திருப்பாடல் 8 )
திறக்கப் பாடிய என்னினும் செந்தமிழ்
உறைப்புப் பாடி அடைப்பித்தாரும் நின்றார்
மறைக்க வல்லரோ தம்மைத் திருவாய்மூர்ப்
பிறைக்கொள் செஞ்சடையார் இவர் பித்தரே