சொக்கநாதப் பெருமானிடம் தருமி வேண்டியது என்ன? (திரைக்கதையும், உண்மை வரலாறும்)

1965ஆம் ஆண்டு வெளிவந்த, மிகப் பிரசித்தி பெற்ற; தலைசிறந்த பக்திப் படைப்பான 'திருவிளையாடல்' திரைப்படத்தில், திரைக்கதைச் சுவைக்காக தருமி எனும் இளைஞர் ஏதுமறியா ஒரு நகைச்சுவைப் பாத்திரமாகச் சித்திரிக்கப் பெற்றிருப்பார். இனி இப்பதிவில் பரஞ்சோதி முனிவர் அருளியுள்ள 'திருவிளையாடல் புராணம்' எனும் பிரமாண நூலின் வாயிலாக, இந்நிகழ்வின் மெய்மையான வரலாற்றினை அறிந்து மகிழ்வோம், 

(1)
ஆதிசைவ இளைஞரான தருமி என்பார் சொக்கநாதப் பரம்பொருளின் திருமுன்பு சென்று, 'எந்தையே, தந்தை; தாயற்றவனாய் வாழ்ந்து வரும் அடியேனுக்குத் திருமண விருப்பமிருந்தும் அதற்கான பொருளின்றி வருந்துகின்றேன். அவ்வறுமை நோய் தீர்வதற்கோர் வாய்ப்பு இச்சமயத்தில் அமைந்துள்ளது ஐயனே' என்று உளமுருக விண்ணப்பிக்கத் துவங்குகின்றார், 

(திருஆலவாய்க் காண்டம் - தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம் - திருப்பாடல் 2516)
தந்தை தாயிலேன் தனியனாகிய 
மைந்தனேன் புது வதுவை வேட்கையேன் 
சிந்தை நோய் செயும் செல்லல் தீர்ப்பதற்(கு) 
எந்தையே இது பதமென்(று) ஏத்தியே

(2)
'வேதநூல்களையும்; எண்ணில் பல சிவாகமங்களையும் முழுமையாகக் கற்றுணர்ந்தும், திருமண வேள்வி நடந்திராத காரணத்தால் உன் திருமேனியைத் தீண்டிப் பூசிக்கும் பேற்றினையும் உடையேன் அல்லேன்' என்று மேலும் தொடர்கின்றார் தருமி (ஆதலின் தருமி 'மகா பண்டிதர்' என்பது இத்திருப்பாடலில் இருந்து தெள்ளென விளங்கும்) , 

(திருஆலவாய்க் காண்டம் - தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம் - திருப்பாடல் 2517)
நெடிய வேதநூல் நிறைய ஆகமம் 
முடிய ஓதிய முறையினில் நிற்கெனும் 
வடிவில் இல்லற வாழ்க்கையின்றி நின் 
அடி அருச்சனைக்(கு) அருகன் ஆவனோ

(3)
'ஐயனே, உன் திருவுள்ளம் யாவும் அறியுமே. அடியவன் உய்வு பெறுமாறு, பாண்டிய வேந்தனின் உள்ளக் கருத்துணர்ந்து; ஒரு கவியினைப் புனைந்து அதனை அடியேனுக்கு உரைத்தருள வேண்டும்' என்று அகம் குழைந்து ஆதிப்பரம்பொருளாம் சொக்கநாத வள்ளலிடம் வேண்டுகின்றார் (ஆதலின் 'இறைவரே நேரடியாகத் தோன்றி கவியொன்றை அளித்தருள வேண்டும்' என்று வேண்டுவது தருமியின் திடபக்தியைப் பறைசாற்றுகின்றது),

(திருஆலவாய்க் காண்டம் - தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம் - திருப்பாடல் 2518)
ஐய யாவையும் அறிதியே கொலாம் 
வையை நாடவன் மனக் கருத்துணர்ந்(து)
உய்யவோர் கவி உரைத்(து) எனக்கருள் 
செய்ய வேண்டும் என்றிரந்து செப்பினான்

(4)
அடியற்கு எளியராம் நம் சோமசுந்தரப் பெருங்கடவுள் தருமியின் பால் கருணைத் திருநோக்கம் புரிந்தருள்கின்றார். 'கொங்கு தேர் வாழ்க்கை' எனும் கவியொன்றினைப் புனைந்து, அதனைத் தன் திருவாக்காலேயே படித்தருளிப் பின்னர் தருமிக்கு அளித்தருள, தருமி சொக்கநாதப் பெருமானை இறைஞ்சி அக்கவியைப் பெற்றுக் கொள்கின்றார் (என்னே தருமியின் தவம்). 

(திருஆலவாய்க் காண்டம் - தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம் - திருப்பாடல் 2519)
தென்னவன் குல தெய்வமாகிய 
மன்னர் கொங்கு தேர் வாழ்க்கை இன்தமிழ் 
சொல்நலம் பெறச் சொல்லி நல்கினார் 
இன்னல் தீர்ந்தவன் இறைஞ்சி வாங்கினான்

(இறுதிக் குறிப்பு): 
பின்னாளில் நம் அப்பர் சுவாமிகளின் திருவாக்கில் தருமி இடம் பெறுவாராகில், அந்த உத்தம சீலர் சொக்கநாதப் பெருமான்பால் கொண்டிருந்த அடிமைத் திறத்தினை என்னென்று போற்றுவது, 

('புரிந்தமரர் தொழுதேத்தும்' என்று துவங்கும் திருப்புத்தூர் தேவாரம் - திருப்பாடல் 3)
நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி
    நற்கனகக் கிழி தருமிக்(கு) அருளினோன் காண்

நக்கீரர் பொற்றாமரைக் குளத்திலிருந்து உயிர்பெற்று வெளிவந்த பின்னர் நிகழ்ந்தது என்ன? (அரிதினும் அரிதான திருவிளையாடல் புராணக் குறிப்புகள்)

ஆலவாய் முதல்வரின் நெற்றிக்கண் சுடரினால் நக்கீரனார் வெந்து பொடியாகிக் கரைய, இறையனாரும் திருவுருவம் மறைகின்றார். அது கண்டு பாண்டிய வேந்தனும் மற்றுமுள்ள சங்கப் புலவர்களும் பதறி, சோமசுந்தரப் பரம்பொருளிடம் பிழைபொறுக்குமாறு மன்றாடியவாறே, ஆலவாய்த் திருக்கோயிலுக்கு விரைகின்றனர். . 

அச்சமயம் பொற்றாமரைக் குளத்தருகே ஆலவாய்ப் பரம்பொருள் மதுரைப் பேரரசியான தன் காதலியாருடன் (யாவரும் காணுமாறு) திருக்காட்சி தந்தருள்கின்றார். பின் இறைவர் குளத்தைப் பார்த்தருள, நக்கீரப் பெருந்தகையார் கர்ம தேகம் நீங்கப் பெற்றுச் சிவமூர்த்தி அருளிய தூயதோர் திருமேனியுடன் வெளிப்படுகின்றார். இறையவர் தன் திருக்கரங்களால் நக்கீரரைப் பற்றிக் கரையேற்றுகின்றார் (ஆ, என்னே கருணை! இம்மூர்த்தியன்றி நமைக் கரையேற்றுவாரும் உளரோ?). 

(1)
நக்கீரர் தன்வயமற்றவராய் இறைவரையும் மீனாட்சி அம்மையையும் பன்முறை பணிந்தெழுந்து, பிழைபொறுக்குமாறு வேண்டி விண்ணப்பித்து 'கயிலை பாதி; காளத்தி பாதி' எனும் பனுவலால் அம்பிகை பாகனாரைப் பணிந்தேத்துகின்றார் (இப்பனுவல் 11ஆம் திருமுறையில் இடம்பெறுகின்றது). பின்னர் பின்வரும் 7 திருப்பாடல்களால் இறைவரின் அருட்செயல்களை ஒவ்வொன்றாகப் பட்டியலிட்டுப் போற்றி செய்கின்றார், 

(தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம் - திருப்பாடல் 2554)
அறனிலான் இழைத்த வேள்வி அழித்த பேராண்மை போற்றி 
மறனிலாச் சண்டிக்கீந்த மாண்பெரும் கருணை போற்றி 
கறுவிவீழ் கூற்றைக் காய்ந்த கனைகழல் கமலம் போற்றி 
சிறுவனுக்கழியா வாழ்நாள் அளித்தருள் செய்தி போற்றி

(தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம் - திருப்பாடல் 2555)
சலந்தரன் உடலம் கீண்ட சக்கரப் படையாய் போற்றி 
வலந்தரும் அதனை மாயோன் வழிபடக் கொடுத்தாய் போற்றி 
அலர்ந்த செங்கமலப் புத்தேள் நடுச்சிரம் அரிந்தாய் போற்றி 
சிலந்தியை மகுடம் சூட்டி அரசருள் செல்வம் போற்றி

(தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம் - திருப்பாடல் 2556)
திரிபுரம் பொரிய நக்க சேவகம் போற்றி மூவர்க்(கு)
அருளிய தலைமை போற்றி; அனங்கனை ஆகம் தீய 
எரியிடு நயனம் போற்றி; இரதி வந்திரப்ப மீளக் 
கரியவன் மகனுக்காவி உதவிய கருணை போற்றி

(தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம் - திருப்பாடல் 2557)
நகைத்தட வந்த வந்த நகுசிரம் திருகி வாங்கிச் 
சிகைத்திரு முடிமேல் வைத்த திண் திறல் போற்றி; கோயில் 
அகத்தவி சுடரைத் தூண்டும் எலிக்(கு) அரசாள மூன்று 
சகத்தையும் அளித்த தேவர் தம்பிரான் சரணம் போற்றி

(தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம் - திருப்பாடல் 2558)
பொருப்(பு) அகழ்ந்தெடுத்தோன் சென்னி புயமிற மிதித்தாய் போற்றி 
இருக்கிசைத்(து) அவனே பாட இரங்கி வாள் கொடுத்தாய் போற்றி 
தருக்கொடும் இருவர் தேடத் தழல் பிழம்பானாய் போற்றி 
செருக்கு விட்டவரே பூசை செய்யநேர் நின்றாய் போற்றி

(தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம் - திருப்பாடல் 2559)
பருங்கைமால் யானை ஏனம் பாய் புலி அரிமான் மீனம் 
இருங்குறள் ஆமை கொண்ட இகல்வலி கடந்தாய் போற்றி 
குரங்கு பாம்பெறும்பு நாரை கோழியாண் அலவன் தேரை 
கருங்குரீஇ கழுகின் அன்புக்கிரங்கிய கருணை போற்றி

(தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம் - திருப்பாடல் 2560)  
சாலநான் இழைத்த தீங்குக்(கு) என்னையும் தண்டம்செய்த 
கோலமே போற்றி; பொல்லாக் கொடியனேன் தொடுத்த புன்சொல் 
மாலை கேட்டென்னை ஆண்ட மலைமகள் மணாள போற்றி 
ஆலவாய் அடிகள் போற்றி அம்மைநின் அடிகள் போற்றி

(2)
இதன் பின்னர் 'கோபப் பிரசாதம்' எனும் பனுவலால் அம்மையப்பரை துதிக்கின்றார் (இத்தொகுப்பும் 11ஆம் திருமுறையில் இடம்பெறுகின்றது),

(தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம் - திருப்பாடல் 2561)  
ஆஅலந்தனேன் அடியனேற்(கு) அருளருள் என்னாக் 
கோவமும் பிரசாதமும் குறித்துரை பனுவல் 
பாஅலங்கலால் பரனையும் பங்கில் அங்கையற்கண் 
பூவை தன்னையும் முறை முறை போற்றி என்றேத்தா

(3)
இதன் தொடர்ச்சியாய், 'பெருந்தேவ பாணி; திருஎழுகூற்றிருக்கை' எனும் பாமாலைகளால் உமையொரு பாகனாரை மேலும் போற்றி செய்கின்றார், (இத்தொகுப்பும் 11ஆம் திருமுறையில் இடம்பெறுகின்றது),

(தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம் - திருப்பாடல் 2562) 
தேவதேவனைப் பின்பெரும் தேவ பாணியொடும் 
தாவிலேழ்இசை ஏழுகூற்றிருக்கையும் சாத்திப் 
பூவர் சேவடி சென்னிமேல் பூப்ப வீழ்ந்தெழுந்தான் 
பாவலோர்களும் தனித்தனி துதித்தனர் பணிந்தார்

(இறுதிக் குறிப்பு):
மதுரைத் திருக்கோயிலைத் தரிசிக்கச் செல்லுகையில், நக்கீரனார் அருளியுள்ள, மேற்குறித்துள்ள 7 போற்றித் திருப்பாடல்களையும், 'கயிலை பாதி காளத்தி பாதி', 'கோபப் பிரசாதம்', 'பெருந்தேவ பாணி', 'திருஎழுகூற்றிருக்கை' ஆகிய தொகுப்புகளையும்,  பொற்றாமரைக் குளப்படிகளில் அமர்ந்தவாறு பாராயணம் புரிந்து, அம்மையப்பரின் பரிபூரணத் திருவருளுக்கு உரியராவோம்.