சிவபரம்பொருளைத் திருமால் விடை வடிவில் தாங்கிய அற்புத நிகழ்வு:

(1)
திரிபுர சம்ஹாரத் திருநாளில் பாற்கடல் வாசரான ஸ்ரீமன் நாராயண மூர்த்தி ஆதிமுதற் பொருளான சிவபெருமானை விடை வாகன வடிவில் தாங்கிய நிகழ்வினை நம் மணிவாசகப் பெருமான் பின்வரும் திருப்பாடலில் பதிவு செய்கின்றார்,

(திருவாசகம் - திருச்சாழல் - திருப்பாடல் 15)
...
தடமதில்கள் அவைமூன்றும் தழலெரித்த அந்நாளில்
இடபமதாய்த் தாங்கினான் திருமால்காண் சாழலோ

(2)
ஸ்ரீமகாவிஷ்ணு மால்விடையான அரிய குறிப்பினை நம் சுந்தரர் பெருமானாரும் பின்வரும் திருப்பாடலில் 'திரியும் முப்புரம் தீப்பிழம்பாகச் செங்கண்மால் விடைமேல் திகழ்வானை' என்று ஐயத்திற்கு இடமின்றிப் பதிவு செய்கின்றார்,

('ஆலம் தான் உகந்தானை' எனும் திருக்கச்சி ஏகம்ப தேவாரம் - திருப்பாடல் 3) 
திரியும் முப்புரம் தீப்பிழம்பாகச்
    செங்கண்மால் விடைமேல் திகழ்வானைக்
கரியின் ஈருரி போர்த்துகந்தானைக்
    காமனைக் கனலா விழித்தானை
வரிகொள் வெள்வளையாள் உமைநங்கை
    மருவி ஏத்தி வழிபடப் பெற்ற
பெரிய கம்பனை, எங்கள் பிரானைக்
    காணக் கண்அடியேன் பெற்றவாறே

(3)
பொதுவில் பரந்தாமனாரின் விடைவடிவினை 'போர்விடை' என்று சைவத் திருமுறைகள் பேசுகின்றது.

நம் அப்பர் சுவாமிகளும் 'செருவளரும் செங்கண்மால் ஏற்றினான் காண்' என்று இக்கருத்தையே பதிவு செய்கின்றார் ('எம்பந்த வல்வினைநோய்' எனும் திருவாரூர் தேவாரத்தின் 10ஆம் திருப்பாடல்).'செருவளரும்' எனும் பதம் 'போரில் சிறந்த ஏறு - போரேறு' என்பதைக் குறிக்க வந்தது.

(4)
பின்வரும் திருப்பாடலில் நம் கச்சியப்ப சிவாச்சாரிய சுவாமிகளும், 'மாயவன் ஏற்றின் மேனிகொண்டு எந்தையைத் தாங்கினான்' என்று குறிக்கின்றார்,

(கந்தபுராணம் - தக்ஷ காண்டம் - ததீசி உத்தரப் படலம் - திருப்பாடல் 314)
சாற்றும் அவ்விடைக்கே தனைத் தாங்குபேர்
ஆற்றல் ஈந்த செயலறிந்து அல்லவோ
மாற்றலார் புரம் செற்றுழி மாயவன்
ஏற்றின் மேனிகொண்டு எந்தையைத் தாங்கினான்

(5)
(இறுதிக் குறிப்பு - 'செங்கண் மால்')

தேவாரத் திருப்பாடல்களில், பொதுவில் 'செங்கண் விடை' என்று மட்டுமே வருமேயானால் அதற்கு 'சிவந்த கண்களைக் கொண்ட ஏறு' என்றும், 'மால்விடை' என்று மட்டுமே வருமாயின் அதற்கு 'சிறப்பு பொருந்திய விடை' என்றும் பொருள் கொள்வர். எனினும் 'செங்கண் மால்' என்று ஒருசேர குறிக்கப் பெறும் திருப்பாடல்கள் அனைத்தும் திருமாலான ஸ்ரீமகாவிஷ்ணுவை மட்டுமே குறிக்க வந்தது. 

'செங்கண் மால் பிரமற்கும் அறிவொணா' எனும் திருபுள்ளிருக்குவேளூர் திருப்பாடலில் நம் அப்பர் சுவாமிகள் 'செங்கண் மால்' என்றே திருமாலைக் குறிக்கின்றார்.

சிவபரம்பொருளின் திருமேனியில் திருமால் இடபாகம் பெற்றது எவ்வாறு?

உலகீன்ற நம் உமையன்னை அரியபெரிய தவமிருந்து சிவமாம் பரம்பொருளின் திருமேனியில் இடபாகம் பெற்ற நிகழ்வினைப் புராணங்கள் பிரசித்தமாகப் பறைசாற்றுகின்றன. எனினும் முக்கண் முதல்வர் 'எதன் பொருட்டு மறிகடல் வண்ணரான ஸ்ரீமகாவிஷ்ணுவிற்கு தன் திருமேனி பாகத்தினை நல்கியருளினார்?' என்பது அரிய குறிப்பாகவே விளங்கி வருகின்றது. இனி இப்பதவில் அது குறித்துச் சிந்தித்துத் தெளிவுறுவோம்,

முதற்கண் சிவமூர்த்தியின் 'சங்கர நாராயண' திருவடிவிற்கான தேவார மூவரின் திருப்பாடல் குறிப்புகளைக் காண்போம்,

'மண்ணுமோர் பாகமுடையார் மாலுமோர் பாகமுடையார்' என்பது ஞானசம்பந்தப் பெருமானாரின் திருவாக்கு (திருப்பெரும்புலியூர் தேவாரம் -திருப்பாடல் 1)

'சீரேறு திருமாலோர் பாகத்தான் காண்' என்று நம் அப்பர் சுவாமிகள் குறிக்கின்றார் ('கைம்மான மதக்களிற்றின்' எனும் திருவாரூர் தேவாரம் - திருப்பாடல் 5)

'திருமாமகள் கோன் திருமாலோர் கூறன்' என்று நம்பிகள் பெருமானார் பதிவு செய்கின்றார் ('முந்தையூர்' எனும் திருஇடையாறு தேவாரம் - திருப்பாடல் 9)

இனி இப்பதிவு முன்னிறுத்தும் கேள்விக்கான விடையினை அறிய திருமந்திரத்திற்குள் பயணிப்போம்,

(1)
ஆதிமுதற் பொருளான சிவமூர்த்தி, திருமாலின் பூசனையால் திருவுள்ளம் மகிழ்ந்து, காத்தற் தொழிலை சிறந்து மேற்கொள்ளும் பொருட்டு சக்கரமொன்றினை அளித்தருள்கின்றார். அதீத சக்தி பொருந்திய அதனைத் தரிக்கஒண்ணாமையால் திருமால் சிவபெருமானை மீண்டுமொரு முறை அர்ச்சித்துப் போற்றி விண்ணப்பிக்க, சிவமூர்த்தி வைகுந்த வாசருக்குத் தன் சக்தியினில் ஒன்றைக் கூறிட்டுக் கொடுத்துப் பேரருள் புரிகின்றார்,

(சக்கரப் பேறு - திருமந்திரம் - இரண்டாம் தந்திரம் - திருப்பாடல் 2)
சக்கரம் பெற்றுநல் தாமோதரன் தானும்
சக்கரம் தன்னைத் தரிக்க ஒண்ணாமையால்
மிக்கஅரன் தன்னை விருப்புடன் அற்சிக்கத்
தக்கநற் சத்தியைத் தான்கூறு செய்ததே

(2)
தன் சக்தியைக் கூறிட்டுக் கொடுத்து, ஸ்ரீமன் நாராயணர் அதனை முழுவதுமாய் கிரகித்துக் கொள்ள, தன் திருமேனியின் பாகமொன்றினையும் கூறிட்டுக் கொடுத்து அருள் புரிகின்றார்,

(சக்கரப் பேறு - திருமந்திரம் - இரண்டாம் தந்திரம் - திருப்பாடல் 3)
கூறதுவாகக் குறித்த நற்சக்கரம்
கூறது செய்து கொடுத்தனன் மாலுக்குக்
கூறது செய்து கொடுத்தனன் சத்திக்குக்
கூறது செய்து தரித்தனன் கோலமே

ஸ்ரீமகாவிஷ்ணு சிவபெருமானிடமிருந்து சக்கரப் படையைப் பெற்ற அற்புத நிகழ்வு:

கொண்டல் வண்ணரான ஸ்ரீமன் நாராயணரை 'ஆழியான்', 'ஆழி வலவன்', 'நேமியான்' என்று சக்கரதாரியாக தேவாரப் பனுவல்கள் குறிக்கின்றன. சீர்மையெலாம் பொருந்திய இச்சக்கரப் படையைத் திருமால் பெற்று மகிழ்ந்த அற்புத நிகழ்வினை இனிக் காண்போம்,

புருஷோத்தமரான திருமால், காத்தற் தொழிலைச் சிறந்து மேற்கொள்ளும் பொருட்டு, சலந்தராசுர சம்ஹார காலத்தில் சிவபரம்பொருள் பிரயோகித்த சக்கரப் படையைப் பெற வேண்டி, திருநீற்றினைத் தரித்து, நியமத்துடன் ஆயிரம் தாமரை மலர்களால் அனுதினமும் முக்கண் முதல்வரை அர்ச்சித்து வருகின்றார். இந்நிலையில் ஒரு சமயம் தாமரை மலர்களுள் ஒன்றினைச் சிவமூர்த்தி மறைத்தருள, தன் திருக்கண்களில் ஒன்றையே மலரென இட்டு அப்பூசையை நிறைவு செய்கின்றார் மாதவனார்.  

இவ்வரிய செயலால் திருவுள்ளம் மகிழ்ந்தருளும் அம்பிகை பாகத்து அண்ணலாரும் பூமகள் கேள்வரான திருமாலுக்கு அச்சக்கரப் படையினை அளித்துப் பேரருள் புரிகின்றார். இக்காரணத்தால் பாற்கடல் வாசனார் 'புண்டரீகாக்ஷன்; கமலக்கண்ணன்' முதலிய திருநாமங்களால் போற்றப் பெறுகின்றார்.

இனி இந்நிகழ்விற்கான அகச்சான்றுகளை நால்வர் பெருமக்கள் மற்றும் கச்சியப்ப சிவாச்சாரியாரின் திருப்பாடல்கள் வாயிலாகச் சிந்தித்து மகிழ்வோம், 

(1 - ஞானசம்பந்தர் தேவாரம்)
(திருவீழிமிழலை - 'ஏரிசையும்' எனும் திருப்பதிகம் - திருப்பாடல் 8 )
தருப்பமிகு சலந்தரன் தன் உடல் தடிந்த சக்கரத்தை வேண்டியீண்டு
விருப்பொடு மால் வழிபாடு செய்யஇழி விமானம்சேர் மிழலையாமே

(திருவீழிமிழலை - 'புள்ளித்தோலாடை' எனும் திருப்பதிகம் - திருப்பாடல் 7)
தன்தவம் பெரிய சலந்தரன் உடலம் தடிந்த சக்கரம் எனக்கருள் என்று 
அன்றுஅரி வழிபட்டு இழிச்சிய விமானத்து இறையவன் 

(2 - அப்பர் தேவாரம்)
(திருவீழிமிழலை - 'பூதத்தின் படையர்' எனும் திருப்பதிகம் - திருப்பாடல் 8 )
நீற்றினை நிறையப் பூசி நித்தல் ஆயிரம் பூக்கொண்டு
ஏற்றுழி ஒருநாள் ஒன்றுகுறையக் கண்நிறைய இட்ட
ஆற்றலுக்கு ஆழி நல்கியவன் கொணர்ந்து இழிச்சும் கோயில்
வீற்றிருந்து அளிப்பர் வீழிமிழலையுள் விகிர்தனாரே

('பருவரை ஒன்றுசுற்றி' எனும் பொதுத் திருப்பதிகம் - திருப்பாடல் 10)
தடமலர் ஆயிரங்கள் குறைவொன்றதாக நிறைவென்று தன்கண் அதனால்
உடன்வழிபாடு செய்த திருமாலை எந்தை பெருமான்உகந்து மிகவும்
சுடரடியால் முயன்று சுழல்வித்து அரக்கன் இதயம் பிளந்த கொடுமை
அடல்வலி ஆழி ஆழியவனுக்கு அளித்த அவனா நமக்கொர் சரணே

(3 - சுந்தரர் தேவாரம்)
(திருக்கலயநல்லூர் - 'குரும்பைமுலை' எனும் திருப்பதிகம் - திருப்பாடல் 2)
செருமேவு சலந்தரனைப் பிளந்த சுடர்ஆழி
    செங்கண்மலர் பங்கயமாச் சிறந்தானுக்கருளி

(4 - திருவாசகம்)
(திருத்தோணோக்கம் - திருப்பாடல் 10)
பங்கயம் ஆயிரம் பூவினில்ஓர் பூக்குறையத்
தம்கண் இடந்துஅரன் சேவடிமேல் சாத்தலுமே
சங்கரன் எம்பிரான் சக்கரம் மாற்குஅருளியவாறு
எங்கும் பரவிநாம் தோணோக்கம் ஆடாமோ

(5 - கந்தபுராணம்)
(தக்ஷ காண்டம் - ததீசி யுத்தரப் படலம் - திருப்பாடல் 297)
அவன் சலந்தரனை வீட்டும் ஆழியை வாங்கப் பன்னாள்
சிவன்கழல் வழிபட்டு ஓர்நாள் செங்கணே மலராச் சாத்த
உவந்தனன் விடைமேல் தோன்றி அப்படை உதவப் பெற்று
நிவந்தனன் அதனால் வையம் நேமியான் என்பமாதோ

திருமகள் வழிபட்ட சிவத்தலங்கள் மற்றும் அன்னை ஸ்ரீமகாலக்ஷ்மி தொடர்பான அரிய திருமுறைக் குறிப்புகள்:

வைகுந்த வாசனாரின் திருமார்பில் எழுந்தருளியிருக்கும் அன்னை ஸ்ரீமகாலக்ஷ்மியை 'செய்ய மாது; செய்யவள், செய்யாள், திருமகள்; திருமங்கை; திருவினாள்; பூமகள்' என்று தேவாரப் பனுவல்கள் சிறப்பிக்கின்றன. 

(1)
அன்னை ஸ்ரீமகாலக்ஷ்மி பல்வேறு சிவத்தலங்களில் வழிபட்டுள்ள நிகழ்வுகளைத் தலபுராணங்கள் நமக்கு அறிவிக்கின்றன. 'செய்யாள் வழிபட நின்றார் தாமே' என்று பின்வரும் திருவாலங்காட்டுத் திருப்பாடலில் நம் அப்பர் சுவாமிகள் பதிவு செய்கின்றார்,

(திருவலாலங்காடு - 'ஒன்றா உலகனைத்தும்' எனும் திருப்பதிகம் - திருப்பாடல் 7)
மையாரும் கண்ட மிடற்றார் தாமே
    மயானத்தில் ஆடல் மகிழ்ந்தார் தாமே
ஐயாறும் ஆரூரூம் ஆனைக்காவும்
    அம்பலமும் கோயிலாக் கொண்டார் தாமே
பையாடரவம் அசைத்தார் தாமே
    பழனை பதியா உடையார் தாமே
செய்யாள் வழிபட நின்றார் தாமே
    திருவாலங்காடுறையும் செல்வர் தாமே

(2)
அன்னை ஸ்ரீமகாலக்ஷ்மி திருவாரூரில் அரியபெரிய தவம் புரிந்து, அனைத்து செல்வங்களையும், முடிவிலா மங்கலங்களையும், ஆரூருறைப் பரம்பொருளான சிவபெருமானின் திருவருளால் பெற்ற நிகழ்வினைப் பின்வரும் திருப்பாடலில் கச்சியப்ப சிவாச்சாரியார் பதிவு செய்கின்றார் ('மலர்மென் பாவை' என்பது திருமகளாரைக் குறிக்க வந்தது),

(கந்த புராணம் - உற்பத்தி காண்டம் - குமாரபுரிப் படலம் - திருப்பாடல் 81)
எழில்வளம் சுரக்கும் தொல்லை இலஞ்சியம் கானம் நோக்கி
மழவிடை இறைவன் பொற்றாள் வணங்கியே,மலர்மென் பாவை
முழுதுள திருவும் என்றும் முடிவில் மங்கலமும் எய்த
விழுமிதின் நோற்றுப் பெற்ற வியன் திருவாரூர் கண்டான்

(3)
'திருமகட்குச் செந்தாமரையாம் அடி' என்பது நம் அப்பர் சுவாமிகளின் அற்புதத் திருவாக்கு. 'அம்பிகை பாகத்து அண்ணலாரின் திருவடி நிலைகள் செந்தாமரைகள் ஆதலின் அன்னை ஸ்ரீமகாலக்ஷ்மி அங்கு சிறப்புடன் எழுந்தருளி இருக்கின்றாள்' என்பது இதன் உட்கருத்து. 

(திருவதிகை - 'அரவணையான் சிந்தித்து' எனும் திருப்பதிகம் - திருப்பாடல் 6)
திருமகட்குச் செந்தாமரையாம் அடி
    சிறந்தவர்க்குத் தேனாய் விளைக்கும்அடி
பொருளவர்க்குப் பொன்னுரையாய் நின்றஅடி
    புகழ்வார் புகழ்தகைய வல்லஅடி
உருவிரண்டும் ஒன்றோடொன்று ஒவ்வாஅடி
    உருவென்று உணரப்படாத அடி
திருவதிகைத் தென்கெடில நாடன்அடி
    திருவீரட்டானத்தெம் செல்வன்அடி

(4)
வெவ்வேறு யுக கால கட்டங்களில், ஸ்ரீமன் நாராயணர் அன்னை ஸ்ரீமகாலக்ஷ்மியைப் பிரிய நேரிட்ட சமயங்களில், சிவழிபாடு புரிந்து; சிவபரம்பொருளின் திருவருளாலேயே மீண்டும் இணையப் பெற்றுள்ள நிகழ்வுகளைப் புராணங்கள் விவரிக்கின்றன. பின்வரும் சிவபுரத் திருப்பாடலில் 'செய்யவளை மாலுக்கு ஈந்த சிவனவன் காண்' என்று நம் அப்பர் சுவாமிகள் பதிவு செய்கின்றார்,

(திருசிவப்புரம் - 'வானவன் காண்' எனும் திருப்பதிகம் - திருப்பாடல் 7)
வெய்யவன் காண்; வெய்ய கனலேந்தினான் காண்
    வியன்கெடில வீரட்டம் மேவினான் காண்
மெய்யவன் காண்; பொய்யர்மனம் விரவாதான் காண்
    வீணையோடிசைந்து மிகு பாடல் மிக்க
கையவன் காண்; கையில் மழுவேந்தினான் காண்
    காமனங்கம் பொடிவிழித்த கண்ணினான் காண்
செய்யவன் காண்; செய்யவளை மாலுக்கீந்த
    சிவனவன் காண், சிவபுரத்தெம் செல்வன் தானே

ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி வழிபாடு செய்த சிவத்தலங்கள்:

தசரத திருக்குமாரரான ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி தமிழகப் பகுதிகளிலுள்ள பல்வேறு சிவாலயங்களைத் தரிசித்து வழிபாடு புரிந்துள்ள நிகழ்வுகளை எண்ணிறந்த தலபுராண; திருமுறைக் குறிப்புகள் நமக்குப் பறைசாற்றுகின்றன. இனி இப்பதிவில் கொண்டல் வண்ணரான ஸ்ரீராமர் மூன்று தலங்களில் சிவபரம்பொருளை வழிபட்டதற்கான தேவாரக் குறிப்புகளைக் காண்போம்,

(1)
திருவாரூர் மாவட்டத்திலுள்ள, 'திருஉசாத்தானம்' எனும் காவிரித் தென்கரைத் தலத்தில், ஸ்ரீராமர்; அவர்தம் இளவலான இலக்குவன், ஜாம்பவான், சுக்ரீவன்; அனுமன் ஆகியோர் வழிபட்டுள்ள நிகழ்வினை நம் ஞானசம்பந்தப் பெருமானார் பதிவு செய்கின்றார்,

(திருஉசாத்தானம் - 'நீரிடை' எனும் ஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பாடல் 1)
நீரிடைத் துயின்றவன்; தம்பி; நீள் சாம்புவான்
போருடைச் சுக்கிரீவன்; அநுமான் தொழக்
காருடை நஞ்சுண்டு காத்தருள் செய்தஎம்
சீருடைச் சேடர்வாழ் திருஉசாத்தானமே

(2)
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள, 'திருஆமாத்தூர்' எனும் நடுநாட்டுத் தலத்தில், ஸ்ரீராமர் வழிபட்டுள்ள குறிப்பினை நம் அப்பர் சுவாமிகள் 'இராமனும் வழிபாடு செய் ஈசனை' என்று குறிக்கின்றார், 

(திருஆமாத்தூர் - 'மாமாத்தாகிய' எனும் அப்பர் தேவாரம் - திருப்பாடல் 5)
குராமன்னும் குழலாள் ஒரு கூறனார்
அராமன்னும் சடையான் திருஆமாத்தூர்
இராமனும் வழிபாடு செய் ஈசனை
நிராமயன் தனை நாளும் நினைமினே

(3)
கடலூர் மாவட்டத்திலுள்ள, 'திருநாரையூர்' எனும் காவிரி வடகரைத் தலத்தில், ஸ்ரீராமர் வழிபாடு செய்துள்ள நிகழ்வினைக் 'கழுகினொடு காகுத்தன் கருதிஏத்தும் நம்பனை' என்று நம் அப்பர் சுவாமிகள் போற்றுகின்றார் (கழுகு என்பது 'சடாயு; சம்பாதியையும், 'காகுத்தன்' எனும் திருப்பெயர் 'ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியையும் குறிக்க வந்தது).

(திருநாரையூர் - 'சொல்லானை' எனும் அப்பர் தேவாரம் - திருப்பாடல் 4)
செம்பொன்னை; நன்பவளம் திகழும் முத்தைச்
    செழுமணியைத், தொழுமவர்தம் சித்தத்தானை
வம்பவிழும் மலர்க்கணை வேள் உலக்க நோக்கி
    மகிழ்ந்தானை. மதிற்கச்சி மன்னுகின்ற
கம்பனை,எம் கயிலாய மலையான் தன்னைக்
    கழுகினொடு காகுத்தன் கருதிஏத்தும்
நம்பனை,எம் பெருமானை, நாதன் தன்னை
    நாரையூர் நன்னகரில் கண்டேன் நானே

(காகுத்தன் எனும் திருநாமம் தோன்றிய காரணம்): 
சித்திரகூடத்தில் ஸ்ரீராமர் அன்னை ஸ்ரீஜானகியின் திருமடியில் தலை வைத்து துயில் புரிந்திருக்க, காக வடிவில் அங்கு வரும் இந்திரனின் மகனான ஜெயந்தன் அன்னையின் திருமார்பினைத் தீண்ட முனைகின்றான். 

ஸ்ரீராமர் வெகுண்டு, அங்கிருந்த சிறு புல்லொன்றினையே அஸ்திரமாக அதன் மீது ஏவ, எண்ணிறந்த உலகங்களுக்கு ஓடோடிச் சென்று கதறியும் எவரொருவரும் அபயம் அளிக்க முன்வராமையினால், மீண்டும் ஸ்ரீராமரின் திருவடிகளிலேயே சென்று தஞ்சமடைகின்றான். 

கோசலை மைந்தன் ஜெயந்தனாகிய காகத்தின் ஒரு கண் பார்வையினை மட்டும் அப்புல்லினால் குத்தி நீக்கி, பிழை பொறுத்தருள்கின்றார்.

ஸ்ரீவாமன மூர்த்தி வழிபட்ட இரு சிவத்தலங்கள்:

வைகுந்த வாசரான ஸ்ரீமகாவிஷ்ணுவின் வாமன அவதார நிகழ்வுகள் எண்ணிறந்த தேவாரத் திருப்பதிகங்களில் குறிக்கப் பெற்றுள்ளன.

(1)
(ஸ்ரீவாமன மூர்த்தி மகாபலிச் சக்கரவர்த்தியிடம் மூவடி மண் தானமாகக் கேட்ட நிகழ்வு):

மண் தனை இரந்து கொண்ட மாயன் ('மனைவிதாய்' எனும் திருநாகைக்காரோண அப்பர் தேவாரம் - 4ஆம் திருப்பாடல்)

மாவலி பால்  காணிக்கு இரந்தவன் ('மாணிக்கு உயிர் பெற' எனும் திருமாற்பேறு அப்பர் தேவாரம் - 1ஆம் திருப்பாடல்)

(2)
(ஸ்ரீவாமன மூர்த்தி விண்ணையும் மண்ணையும் ஈரடியால் அளந்தருளிய நிகழ்வு)

மண்ணளந்த மணிவண்ணர் (திருவலம்புரம் - அப்பர் தேவாரம் - 7ஆம் திருப்பாடல்)

பாலனாகி உலகளந்த படியானும் ('நல்லான் காண்' எனும் திருவலிவல அப்பர் தேவாரம் - 10ஆம் திருப்பாடல்)

மண்ணினைத் தாவ நீண்ட மாலினுக்கு அருளும் வைத்தார் ('நங்கையைப் பாகம் வைத்தார்' எனும் திருக்கழிப்பாலை அப்பர் தேவாரம் - 2ஆம் திருப்பாடல்)

இனி இப்பதிவில் ஸ்ரீவாமன மூர்த்தி வழிபட்ட இரு சிவத்தலங்கள் பற்றிய அகச் சான்றுகளைக் காண்போம், 

(1)
திருமாணிகுழியில், நியமத்துடன் ஸ்ரீவாமன மூர்த்தி வழிபாடு செய்த நிகழ்வினைப் பின்வரும் திருப்பாடலில் சம்பந்தப் பெருமானார் பதிவு செய்கின்றார்,

(திருமாணிகுழி - 'பொன்னியல்' எனும் சம்பந்தர் தேவாரம் - திருப்பாடல் 4)
நித்த நியமத் தொழிலனாகி நெடுமால் குறளனாகி மிகவும்
சித்தமதொருக்கி வழிபாடு செயநின்ற சிவலோகன் இடமாம்
கொத்தலர் மலர்ப்பொழிலின் நீடுகுல மஞ்ஞை நடமாடல் அதுகண்டு 
ஒத்தவரி வண்டுகள் உலாவி இசைபாடுதவி மாணிகுழியே

(2)
பின்வரும் திருப்பாடலில், உலகையளந்த ஸ்ரீவாமன மூர்த்தி திருக்கண்ணார்கோயிலில் சிவலிங்கத் திருமேனியைப் பிரதிஷ்டை செய்து வழிபட்ட நிகழவினை ஞானசம்பந்த மூர்த்தி பதிவு செய்கின்றார். 'தற்குறி' எனும் பதம், சிவபரம்பொருளின் அடையாளமான சிவலிங்கத் திருமேனியைக் குறிக்க வந்தது).

('தண்ணார் திங்கள்' எனும் திருக்கண்ணார்கோயில் - சம்பந்தர் தேவாரம் - திருப்பாடல் 5)
மறுமாண் உருவாய் மற்றிணையின்றி வானோரைச்
செறு மாவலிபால் சென்று உலகெல்லாம் அளவிட்ட
குறுமாண் உருவன் தற்குறியாகக் கொண்டாடும்
கறுமா கண்டன் மேயது கண்ணார் கோயிலே

ஸ்ரீஆதிவராக மூர்த்தி வழிபட்ட இரு சிவத்தலங்கள்:

ஸ்ரீமன் நாராயண மூர்த்தியின் தசாவதார நிகழ்வுகள் எண்ணிறந்த தேவாரப் பனுவல்களில் குறிக்கப் பெற்றுள்ளன. 'ஆகம் பத்து  அரவணையான்' என்று நம் அப்பர் சுவாமிகள் தசாவதாரங்களைக் குறிக்கின்றார்,

('கரவாடும்' எனும் திருக்கச்சி ஏகம்பத் திருப்பதிகம்: திருப்பாடல் 9)
ஆகம்பத்து அரவணையான் அயன் அறிதற்கரியானைப்
பாகம் பெண்ஆண் பாகமாய் நின்ற பசுபதியை
மாகம்ப மறையோதும் இறையானை, மதிற்கச்சி
ஏகம்ப மேயானை என்மனத்தே வைத்தேனே

இனி இப்பதிவில் சிவபுரம்; சீகாழி முதலிய தலங்களில் ஸ்ரீவராக மூர்த்தி வழிபட்டதற்கான திருமுறைச் சான்றுகளைக் காண்போம், 

(1)
பின்வரும் சிவபுரத் திருப்பாடலில் 'தன் திருமுகத்திலுள்ள கோரப்பல்லின் நுனியில் இப்புவியைச் சுமந்து அதனை நிலைநிறுத்திக் காத்தருளிய ஸ்ரீவராக மூர்த்தி வழிபாடு செய்த சிவபுரம்' என்று சம்பந்தச் செல்வர் போற்றுகின்றார் ('எயிறதன் உதிமிசை இதம்அமர் புவிஅது நிறுவிய எழில்அரி வழிபட அருள்செய்த'),    

('புவம்வளி' எனும் சிவபுரத் திருப்பதிகம் - திருப்பாடல் 7):
கதமிகு கருஉருவொடு உகிரிடை வடவரை கணகணவென
மதமிகு நெடுமுகன் அமர்வளை மதிதிகழ் எயிறதன் உதிமிசை
இதம்அமர் புவிஅது நிறுவிய எழில்அரி வழிபட அருள்செய்த
பதமுடை அவனமர் சிவபுரம் நினைபவர் நிலவுவர் படியிலே

(2)
பின்வரும் மற்றொரு சிவபுரத் திருப்பாடலில், 'வென்றிகொள் எயிற்று வெண்பன்றி முன்னாள் சென்றடி வீழ்தரு சிவபுரமே' என்று குறிக்கின்றார் சம்பந்தப் பெருமானார்,

('இன்குரலிசை' எனும் சிவபுரத் திருப்பதிகம் - திருப்பாடல் 2)
அன்றடல் காலனைப் பாலனுக்காய்ப்
பொன்றிட உதைசெய்த புனிதன்நகர்
வென்றிகொள் எயிற்று வெண்பன்றி முன்னாள்
சென்றடி வீழ்தரு சிவபுரமே

(3)
பின்வரும் சீகாழித் திருப்பாடல் கடினப் பதங்களைக் கொண்டது, இறுதி இரு வரிகளில், 'ஸ்ரீவராக மூர்த்தி, இரண்யாட்சனை சம்ஹாரம் புரிந்தருளிய பழி தீர, சீகாழித் திருத்தலத்தில் வழிபாடு செய்த நிகழ்வினை' நம் சம்பந்தப் பெருமானார் பதிவு செய்கின்றார், 

('சுரர்உலகு' எனும் சீகாழித் திருப்பதிகம் - திருப்பாடல் 6)
நிராமய பராபர புராதன பராவுசிவ, ராகஅருள்என்று
இராவும்எதிராயது பராநினை புராணனன் அமர்ஆதி பதியாம்
அராமிசை இராதஎழில் தராய, அர பராயண வராகஉரு !வா
தராயனை, விராயெரி பராய்மிகு தராய்மொழி விராய பதியே

சிவபெருமான் பன்றிக் கொம்பினைத் திருமார்பில் அணிந்திருப்பது எதனால்?

(1)
இரண்யாட்சன் எனும் அசுரன், நமது அண்டத்திலுள்ள 14 உலகங்களுள் ஒன்றான இப்பூமியினைக் கவர்ந்து கொண்டு, பூமிக்கு அடியிலுள்ள இறுதி உலகமான பாதாள லோகத்திற்குச் சென்று விடுகின்றான். ஸ்ரீமன் நாராயணர் பிரமனின் நாசியிலிருந்து வராக ரூபியாய் வெளிப்பட்டுத் தோன்றுகின்றார். மேருமலை போன்று நெடிதுயர்ந்த மகா வராக வடிவினராகி, இரண்யாட்சயனை சம்ஹாரம் புரிந்து, நிலவுலகினை மீண்டும் அதன் முந்தைய இடத்தில் நிலைநிறுத்திக் காக்கின்றார். இதன் பின்னர் வராக மூர்த்தி தன்னிலை இழக்கும் சூழலொன்று உருவாகின்றது,

(கந்தபுராணம் - தக்ஷ காண்டம் - ததீசி உத்தரப் படலம் - திருப்பாடல் 18) 
ஓரிமைக்கு முன் பாதலம் தன்னில் மால் உற்றுக்
கூரெயிற்றினால் பாய்ந்து பொற்கண்ணனைக் கொன்று
பாரினைக்கொடு மீண்டுமுன் போலவே பதித்து
வீரமுற்றனன் தன்னையே மதித்தனன் மிகவும்
-
(மச்ச; கூர்ம; வராக; நரசிம்ம அவதாரங்கள் ஒவ்வொன்றிலும், இது போன்றதொரு தன்னிலை இழக்கும் நிகழ்வு குறிக்கப் பெற்றுள்ளது. இதன் காரணத்தை விளக்கும் புராணக் குறிப்பொன்றினைப் பிறிதொரு சமயம் சிந்திக்கலாம்). 

(2)
வராக மூர்த்தி பூமிக்கும் அதனைச் சூழ்ந்துள்ள கடற்பரப்பிற்கும் பெரும் அழிவினை உருவாக்க  முனைய, நீலகண்டப் பரம்பொருளான சிவபெருமான் அங்கு எழுந்தருளி வருகின்றார்,

(கந்தபுராணம் - தக்ஷ காண்டம் - ததீசி உத்தரப் படலம் - திருப்பாடல் 19) 
மாலும் அப்பகல் அகந்தையாய் உணர்வின்றி மருப்பால்
ஞாலம் யாவையும் அழிதர இடந்தவை நனிசூழ்
வேலை தன்னையும் உடைத்தனன் அன்னதோர் வேலை
ஆலமார் களத்து அண்ணல்கண்டு எய்தினான் அங்கண்

(3)
கண்ணுதற் கடவுளான சிவமூர்த்தி அவ்வராகத்தின் கொம்புகளுள் ஒன்றினைப் பறிக்கின்றார், இச்செயலால் தன்னிலை பெறும் ஆதிவராக மூர்த்தி சிவபரம்பொருளைப் பணிந்தேத்த, ஆலமுண்ட அண்ணலாரும் அவ்விடத்தினின்றும் மறைந்தருள்கின்றார்,

(கந்தபுராணம் - தக்ஷ காண்டம் - ததீசி உத்தரப் படலம் - திருப்பாடல் 20) 
கண்டு கண்ணுதல் அவன் மருப்பொன்றினைக் கரத்தால்
கொண்டு வல்லையில் பறித்தலும், உணர்வுமுன் குறுக
விண்டு மற்றதும் பறிப்பன் இங்கிவன்என வெருவிப்
பண்டு போல நின்றேத்தலும் போயினன் பரமன்

(4)
அன்று முதல் அம்பிகை பாகத்து அண்ணல், நடந்தேறிய இந்நிகழ்விற்கான அடையாளமாய், அப்பன்றிக் கொம்பினைத் தன் திருமார்பினில் அணிந்தவாறு திருக்காட்சி தருகின்றார்,

(கந்தபுராணம் - தக்ஷ காண்டம் - ததீசி உத்தரப் படலம் - திருப்பாடல் 21) 
அன்று கொண்டதோர் மருப்பினைச் சின்னமா அணிந்தான்
இன்றும் அங்கவன் மார்பிடைப் பிறையென இலங்கும்
ஒன்று மற்றிது கேட்டனை நின்றதும் உரைப்பாம்
நன்று தேர்ந்துணர் மறைகளும் இத்திறம் நவிலும்

இனி உமையொரு பாகனார் 'ஏனம்' எனும் பன்றிக் கொம்பினை அணிவதற்கான தேவாரக் குறிப்புகளைக் காண்போம்,

(1)
(சம்பந்தர் தேவாரம் - திருப்பேணுபெருந்துறை - திருப்பாடல் 1)
பைம்மா நாகம் பன்மலர் கொன்றை பன்றி வெண்கொம்பொன்று பூண்டு

(2)
(அப்பர் தேவாரம் - தில்லை - 'பாளையுடை' எனும் திருப்பதிகம் - திருப்பாடல் 6)
வானத்தவர்உய்ய வன்னஞ்சை உண்ட கண்டத்திலங்கும்
ஏனத்துஎயிறு கண்டால் பின்னைக் கண்கொண்டு காண்பதென்னே

(3)
(சுந்தரர் தேவாரம் - திருக்கேதீஸ்வரம் - 'நத்தார்படை' எனும் திருப்பதிகம் - திருப்பாடல் 7)
ஏனத்து எயிறணிந்தான் திருக்கேதீச்சரத்தானே

சிவபெருமான் ஆமை ஓட்டினை அணிகலனாக அணிந்திருப்பது எதனால்?

தேவர்களும் அசுரர்களும் மந்தர மலையை மத்தாக்கிப் பாற்கடலைக் கடைகையில், ஸ்ரீமன் நாராயணர் கூர்ம அவதார மூர்த்தியாய்த் தோன்றி அம்மலை கவிழாது நிலைநிறுத்திக் காக்கின்றார். அமுதம் வெளிப்படுகின்றது, 'அதனை எவ்விதம் பகிர்வது?' என்பது குறித்து தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் கடும் வாக்குவாதமும், போரும் நடந்தேறத் துவங்குகின்றது. 

இந்நிலையில் கருங்கடல் வண்ணரான கூர்மாவதார மூர்த்தி தன்னிலை இழக்க நேரிடுகின்றது. 

(மச்ச; கூர்ம; வராக; நரசிம்ம அவதாரங்கள் ஒவ்வொன்றிலும், இது போன்றதொரு தன்னிலை இழக்கும் நிகழ்வு குறிக்கப் பெற்றுள்ளது. இவை தற்செயலாக நடந்தேறும் நிகழ்வுகள் அன்று, இதற்கான காரணத்தை விளக்கும் புராணக் குறிப்பொன்றினைப் பிறிதொரு சமயம் சிந்திக்கலாம்). 

(1)
கூர்ம மூர்த்தி, திசைகளின் எல்லைகள் வரையிலும் அலைகள் மேலெழுந்து ஆர்ப்பரிக்குமாறு கடல்களைக் கலக்கத் துவங்குகின்றார், உலகங்கள் அழிவுறும் நிலை உருவாகின்றது. இத்தருணத்தில் திருக்கயிலைப் பரம்பொருளான சிவமூர்த்தி 'நாராயணர் தன்னுடைய காத்தல் தொழிலைத் துறந்தனர் போலும்' என்று தன் திருவுள்ளத்தில் கருதுகின்றார், 

(கந்தபுராணம் - தக்ஷ காண்டம் - ததீசி உத்தரப் படலம் - திருப்பாடல் 25) 
அகந்தை எய்தியே யாவையும் தேற்றலான், அலைபோய்த்
திகந்தம் உற்றிட வேலைகள் உழக்கினன் திரியச்
சகம் தனக்கு அழிவெய்தலும், தனதருள் தன்மை
இகந்தனன் கொலாம் கண்ணன் என்று உன்னினன் எங்கோன்

(2)
மறைமுதல்வரான சிவமூர்த்தி அக்கணமே கூர்ம மூர்த்தியின் முன்னர் எழுந்தருளிச் சென்று, சினந்து நோக்கி, அக்கூர்ம வடிவத்தினைத் தன் திருக்கரங்களால் அழுத்தமாகப் பற்றி, அதன் வலிமையை முற்றிலும் நீக்குகின்றார்,  

(கந்தபுராணம் - தக்ஷ காண்டம் - ததீசி உத்தரப் படலம் - திருப்பாடல் 26) 
அற்றை நாள் அவண் வல்லையில் ஏகியே அரி தன்
முற்றலாமையின் உருவினை நோக்கியே முனிந்து
கற்றை வார்சடைக் கண்ணுதல் யாப்புறக் கரத்தால் 
பற்றி ஆங்கவன் அகந்தையும் வன்மையும் பறித்தான்

(3)
ஆதி மூர்த்தியின் திருச்செயலால் புருஷோத்தமரான திருமால் மெய்யுணர்வு எய்தி, தன் முந்தைய நிலைக்கு மீண்டு, மதி சூடும் அண்ணலாரைப் பணிந்து போற்ற, 'அசுரர்களை மாய்த்து தேவர்களுக்கு அமிர்தத்தை ஈவாய் ஆகுக' என்றருளிச் செய்து சிவபெருமான் மறைந்தருள்கின்றார். இதன் பின்னரே பரந்தாமனாரின் மோகினி அவதாரம் நிகழ்ந்தேறுகின்றது, 

(கந்தபுராணம் - தக்ஷ காண்டம் - ததீசி உத்தரப் படலம் - திருப்பாடல் 27) 
நினைந்து தொல்உருக் கொண்டனன் புகழ்தலும், நிலவைப்
புனைந்த செஞ்சடை நின்மலன் 'அவுணரைப் போக்கி
இனைந்த தேவருக்கு அமிர்தினை ஈக' என ஏக
வனைந்த மேனிமான் மாயையால் அவுணரை மாய்த்தான்

(4)
இந்நிகழ்வின் அடையாளமாய் அம்பிகை பாகத்து இறைவர், கூர்ம மூர்த்தியின் ஓட்டினைத் தன் திருமார்பில் அணிகலனாக அணிந்தருள்கின்றார்,

(கந்தபுராணம் - தக்ஷ காண்டம் - ததீசி உத்தரப் படலம் - திருப்பாடல் 28) 
மாய்த்து வானவர்க்கு அமுதினை நல்கினன் வையம் 
காத்த கண்ணன் என்றுரைப்பரால், அவனுறு கமடம்
மீத்தயங்கிய காப்பினை வாங்கியே விமலன்
சாத்தினான் முனம் அணிந்திடு மருப்புடன் சார

இனி முக்கண் முதல்வர் ஆமையோட்டினை அணிவதற்கான தேவாரக் குறிப்புகளைக் காண்போம்,

(1)
(சம்பந்தர் தேவாரம் - திருக்கொடிமாடச்செங்குன்றூர் - 'வெந்த வெண்ணீறணிந்து' எனும் திருப்பதிகம் - திருப்பாடல் 5)
பொன்திகழ் ஆமையொடு புரிநூல் திகழ்மார்பில்  

(2)
(அப்பர் தேவாரம் - திருமறைக்காடு - 'தேரையும் மேல் கடாவி' எனும் திருப்பதிகம் - திருப்பாடல் 2)
அக்கரவு ஆமை பூண்ட அழகனார்

(3)
(சுந்தரர் தேவாரம் - திருநனிபள்ளி - 'ஆதியன் ஆதிரையன்' எனும் திருப்பதிகம் - திருப்பாடல் 9)
ஏன மருப்பினொடும் எழில்ஆமையும் பூண்டுகந்து