17. திருவெண்பாக்கம்:

சென்னையிலிருந்து சுமார் 45 கி.மீ பயணத் தொலைவிலுள்ள பூண்டியில் அமைந்துள்ளது திருவெண்பாக்கம் எனும் தேவாரத் தலம். சுந்தரரால் பாடல் பெற்றுள்ள ஆலயம் முன்னர் திருவிளம்புதூர் எனும் பகுதியில் அமைந்திருந்தது. 1942ஆம் ஆண்டு அரசு, சென்னையின் குடிநீர்த் தேவையைப் போக்க இங்குள்ள குசஸ்தலையாற்றில் அணை கட்டும் பணியைத் துவக்கியது, அதற்கான நிலங்களைக் கையகப்படுத்துகையில் திருவிளம்புதூரும் அதனுள் அடங்கிற்று.

அச்சமயத்தில் அறநிலையத் துறை அமைச்சராக இருந்த திரு. பக்தவத்சலம் அவர்களின் பெருமுயற்சியால், திருவிளம்புதூரிலிருந்த (திருவெண்பாக்க) சிவாலயம் முழுவதுமாய் நீக்கப் பெற்று, அங்கிருந்த மூர்த்தங்களைக் கொண்டு தற்பொழுதுள்ள இடத்தில் புதியதொரு ஆலயமாகப் புதுக்கப் பெற்று, 1968ஆம் ஆண்டு குடமுழுக்கும் நடந்தேறியது. முன்பு ஆலயமிருந்த பகுதி தற்பொழுது பூண்டி நீர்த்தேக்கமாக விளங்கி வருகின்றது. 

ஓரளவு விசாலமான ஆலய வளாகம், சிவமூர்த்தி ஊன்றீஸ்வரர் எனும் திருநாமத்திலும், அம்பிகை மின்னொளி அம்மையாகவும் எழுந்தருளி இருக்கின்றனர். ஒற்றியூரில் சங்கிலியாருக்கு அளித்திருந்த வாக்கினை மீறிய காரணத்தினால் சுந்தரரின் இருகண் பார்வையும் மறைப்பிக்கப் பெற, அந்நிலையிலேயே இத்தல ஆலய வாயிலைப் பணிந்து, 'பெருமானே! நீர் இவ்விடத்து மகிழ்வுடன் எழுந்தருளி உள்ளீரோ?' என்று வினவ, இறைவர் சிறிதும் இணக்கமற்ற தொனியில், 'நாம் இங்கு தான் இருக்கின்றோம், நீர் போகலாம்' என்று உள்ளிருந்தவாறே பதிலுரைத்து, ஊன்றுகோல் ஒன்றினையும் அளித்தருள் புரிகின்றார். 

இறைவரின் அயலார் போன்ற இந்த அணுகுமுறையால் சுந்தரனார் உளமிக நொந்து 'உளோம் போகீர் என்றானே' என்று திருப்பதிகம் பாடுகின்றார்,  

(சுந்தரர் தேவாரம் - திருப்பாடல் 1):
பிழையுளன பொறுத்திடுவர் என்றடியேன் பிழைத்தக்கால்
பழியதனைப் பாராதே படலம்என்கண் மறைப்பித்தாய்
குழைவிரவு வடிகாதா கோயிலுளாயே என்ன
உழையுடையான் உள்ளிருந்து உளோம் போகீர் என்றானே!!

No comments:

Post a Comment