27. திருஇடைச்சுரம்:

சென்னையிலிருந்து சுமார் 55 கி.மீ பயணத் தொலைவில், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கப்பட்டு வரை சென்று, அங்கிருந்து திருப்போரூர் செல்லும் மார்க்கத்தில் சுமார் 6 கி.மீ பயணித்துச் சென்றால் திருஇடைச்சுரம் எனும் இத்தலத்தினை அடையலாம் (தற்கால வழக்கில் 'திருவடிசூலம்'). ஞான சம்பந்தப் பெருமானால் பாடல் பெற்றுள்ள சிறப்புப் பொருந்தியது. 

செங்கல்பட்டு வரையினில் தேசிய நெடுஞ்சாலையாக விளங்கி வரும் பாதை அங்கிருந்து மலைகள் சூழ்ந்த மிக ரம்மியமான பகுதியாக பரிணமிக்கின்றது, 'சற்று முன்னர் நாம் பயணித்து வந்த பாதை தானா?' என்று வியப்புறும் அளவிற்கானதொரு இயற்கைச் சூழலில் இத்தலம் அமையப் பெற்றுள்ளது.

ஓரளவு விசாலமான ஆலய வளாகம், சிவமூர்த்தி மரகதலிங்க சுயம்புத் திருமேனியுடன் ஞானபுரீஸ்வரர்; இடைச்சுர நாதர் எனும் திருநாமங்களுடன் எழுந்தருளி இருக்கின்றார். உமையன்னை 'இமய மடக்கொடியாய்' எழுந்தருளி இருக்கின்றாள். அம்பிகை பசுவடிவில் பால் சொரிந்து வழிபட்ட தலம், கௌதம முனிவரும் சனற்குமாரரும் பூசித்துப் பேறு பெற்றுள்ளனர். 

'சிவபெருமான் இடையராகத் தோன்றி ஞானசம்பந்த மூர்த்திக்கு மோர் அளித்தருளி அவர்தம் திருப்பாடலைக் கேட்டு மகிழ்ந்தார்' எனும் செய்தி இத்தலத்தில் நிலவி வரினும், பெரிய புராணக் குறிப்பு அமையாத தன்மையினால் இதனைச் 'செவிவழிச் செய்தி' என்ற அளவில் மட்டுமே அறிந்து மகிழ்தல் வேண்டும். 

(சம்பந்தர் தேவாரம் - திருப்பாடல் 1):
வரிவளர் அவிரொளி அரவரைதாழ வார்சடை முடிமிசை வளர்மதி சூடிக்
கரிவளர் தருகழல் கால் வலனேந்திக் கனலெரியாடுவர் காடரங்காக
விரிவளர் தருபொழில் இளமயிலால வெண்ணிறத்தருவிகள் திண்ணென வீழும்
எரிவளர் இனமணி புனமணிசாரல் இடைச்சுர மேவிய இவர் வணம்என்னே!!!

No comments:

Post a Comment