26. திருக்கச்சூர்:

 சென்னை - மறைமலை நகரில் அமைந்துள்ளது தேவாரத் தலமான திருக்கச்சூர், ஆலக்கோயில் எனும் கச்சபேஸ்வரர் திருக்கோயில் மற்றும் மலையடிவாரத்திலுள்ள மருந்தீஸ்வரர் திருக்கோயில் என்று இரு சிவாலயங்களை ஒரு தலமெனக் கொண்டு விளங்கும் திருத்தலமிது. இத்தல இறைவர் தன் பொன்னார்த் திருவடிகள் நிலத்தில் தோய, இல்லந்தோறும் சென்று பிக்ஷை பெற்று, அதனைக் கொண்டு நம் சுந்தரரின் பசி போக்கிப் பேரருள் புரிந்துள்ளார்.  

ஆலக்கோயிலின் மூல மூர்த்தி கச்சபேஸ்வரர், இங்கு சோமாஸ்கந்தரான தியாகராஜ மூர்த்தியும் எழுந்தருளி இருப்பதால் 'தியாகராஜ சுவாமி திருக்கோயில்' என்றும் இவ்வாலயம் குறிக்கப் பெறுகின்றது. பிரமாண்டமான திருக்கோயில் வளாகம், நால்வர் பெருமக்களின் திருச்சன்னிதியைத் தரிசித்தவாறே திருக்கருவறையை அடைய, சிறிய திருமேனியரான கச்சபேஸ்வரப் பரம்பொருள் அற்புதமாய் எழுந்தருளி இருக்கின்றார். வெளிப்பிரகாரத்தை வலம் வருகையில் சுந்தர மூர்த்தி சுவாமிகளின் திருச்சன்னிதியையும், விருந்திட்ட ஈஸ்வரரின் திருச்சன்னிதியையும் தரிசித்து மகிழலாம். 

ஆலக்கோயிலிலிருந்து 1 கி.மீ தொலைவில் மலையடிக் கோயிலான மருந்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது, 'மாலை மதியே மலை மேல் மருந்தே' என்று போற்றுவார் நம் வன்தொண்டர். ஓரளவு விசாலமான ஆலய வளாகம், ஒளஷத மூர்த்தியாய் மருந்தீஸ்வரப் பரம்பொருள் எழுந்தருளி இருக்கின்றார். வெளிப்பிரகாரத்தில் ஆறுமுக தெய்வம் திருச்சன்னிதியின்றி கூரைகளுமின்றி, விண்மழையினை அபிஷேகமாக ஏற்றவாறு எழுந்தருளியிருந்த காட்சியைக் கண்டு உள்ளம் பதைக்கின்றது, திருச்சன்னிதி இடிந்து விட்டதாகவும் மீண்டும் புணரமைக்க்க அறநிலையத் துறையை எதிர்நோக்கி இருப்பதாகவும் கேள்வியுற்றோம். 

(சுந்தரர் தேவாரம் - முதல் திருப்பாடல்)
முதுவாய் ஓரி கதற முதுகாட்டெரி கொண்டாடல் முயல்வானே
மதுவார் கொன்றைப் புதுவீ சூடும் மலையான் மகள்தன் மணவாளா
கதுவாய்த் தலையில் பலிநீ கொள்ளக் கண்டால் அடியார் கவலாரே
அதுவே யாமாறிதுவோ கச்சூர் ஆலக்கோயில் அம்மானே


No comments:

Post a Comment