ஸ்ரீமகாவிஷ்ணு சிவபெருமானிடமிருந்து சக்கரப் படையைப் பெற்ற அற்புத நிகழ்வு:

கொண்டல் வண்ணரான ஸ்ரீமன் நாராயணரை 'ஆழியான்', 'ஆழி வலவன்', 'நேமியான்' என்று சக்கரதாரியாக தேவாரப் பனுவல்கள் குறிக்கின்றன. சீர்மையெலாம் பொருந்திய இச்சக்கரப் படையைத் திருமால் பெற்று மகிழ்ந்த அற்புத நிகழ்வினை இனிக் காண்போம்,

புருஷோத்தமரான திருமால், காத்தற் தொழிலைச் சிறந்து மேற்கொள்ளும் பொருட்டு, சலந்தராசுர சம்ஹார காலத்தில் சிவபரம்பொருள் பிரயோகித்த சக்கரப் படையைப் பெற வேண்டி, திருநீற்றினைத் தரித்து, நியமத்துடன் ஆயிரம் தாமரை மலர்களால் அனுதினமும் முக்கண் முதல்வரை அர்ச்சித்து வருகின்றார். இந்நிலையில் ஒரு சமயம் தாமரை மலர்களுள் ஒன்றினைச் சிவமூர்த்தி மறைத்தருள, தன் திருக்கண்களில் ஒன்றையே மலரென இட்டு அப்பூசையை நிறைவு செய்கின்றார் மாதவனார்.  

இவ்வரிய செயலால் திருவுள்ளம் மகிழ்ந்தருளும் அம்பிகை பாகத்து அண்ணலாரும் பூமகள் கேள்வரான திருமாலுக்கு அச்சக்கரப் படையினை அளித்துப் பேரருள் புரிகின்றார். இக்காரணத்தால் பாற்கடல் வாசனார் 'புண்டரீகாக்ஷன்; கமலக்கண்ணன்' முதலிய திருநாமங்களால் போற்றப் பெறுகின்றார்.

இனி இந்நிகழ்விற்கான அகச்சான்றுகளை நால்வர் பெருமக்கள் மற்றும் கச்சியப்ப சிவாச்சாரியாரின் திருப்பாடல்கள் வாயிலாகச் சிந்தித்து மகிழ்வோம், 

(1 - ஞானசம்பந்தர் தேவாரம்)
(திருவீழிமிழலை - 'ஏரிசையும்' எனும் திருப்பதிகம் - திருப்பாடல் 8 )
தருப்பமிகு சலந்தரன் தன் உடல் தடிந்த சக்கரத்தை வேண்டியீண்டு
விருப்பொடு மால் வழிபாடு செய்யஇழி விமானம்சேர் மிழலையாமே

(திருவீழிமிழலை - 'புள்ளித்தோலாடை' எனும் திருப்பதிகம் - திருப்பாடல் 7)
தன்தவம் பெரிய சலந்தரன் உடலம் தடிந்த சக்கரம் எனக்கருள் என்று 
அன்றுஅரி வழிபட்டு இழிச்சிய விமானத்து இறையவன் 

(2 - அப்பர் தேவாரம்)
(திருவீழிமிழலை - 'பூதத்தின் படையர்' எனும் திருப்பதிகம் - திருப்பாடல் 8 )
நீற்றினை நிறையப் பூசி நித்தல் ஆயிரம் பூக்கொண்டு
ஏற்றுழி ஒருநாள் ஒன்றுகுறையக் கண்நிறைய இட்ட
ஆற்றலுக்கு ஆழி நல்கியவன் கொணர்ந்து இழிச்சும் கோயில்
வீற்றிருந்து அளிப்பர் வீழிமிழலையுள் விகிர்தனாரே

('பருவரை ஒன்றுசுற்றி' எனும் பொதுத் திருப்பதிகம் - திருப்பாடல் 10)
தடமலர் ஆயிரங்கள் குறைவொன்றதாக நிறைவென்று தன்கண் அதனால்
உடன்வழிபாடு செய்த திருமாலை எந்தை பெருமான்உகந்து மிகவும்
சுடரடியால் முயன்று சுழல்வித்து அரக்கன் இதயம் பிளந்த கொடுமை
அடல்வலி ஆழி ஆழியவனுக்கு அளித்த அவனா நமக்கொர் சரணே

(3 - சுந்தரர் தேவாரம்)
(திருக்கலயநல்லூர் - 'குரும்பைமுலை' எனும் திருப்பதிகம் - திருப்பாடல் 2)
செருமேவு சலந்தரனைப் பிளந்த சுடர்ஆழி
    செங்கண்மலர் பங்கயமாச் சிறந்தானுக்கருளி

(4 - திருவாசகம்)
(திருத்தோணோக்கம் - திருப்பாடல் 10)
பங்கயம் ஆயிரம் பூவினில்ஓர் பூக்குறையத்
தம்கண் இடந்துஅரன் சேவடிமேல் சாத்தலுமே
சங்கரன் எம்பிரான் சக்கரம் மாற்குஅருளியவாறு
எங்கும் பரவிநாம் தோணோக்கம் ஆடாமோ

(5 - கந்தபுராணம்)
(தக்ஷ காண்டம் - ததீசி யுத்தரப் படலம் - திருப்பாடல் 297)
அவன் சலந்தரனை வீட்டும் ஆழியை வாங்கப் பன்னாள்
சிவன்கழல் வழிபட்டு ஓர்நாள் செங்கணே மலராச் சாத்த
உவந்தனன் விடைமேல் தோன்றி அப்படை உதவப் பெற்று
நிவந்தனன் அதனால் வையம் நேமியான் என்பமாதோ

No comments:

Post a Comment