நாவுக்கரசு சுவாமிகள் தேவாரத்தில் திருஞானசம்பந்தர் பற்றிய அற்புதக் குறிப்புகள் (அப்பர் தேவார நுட்பங்கள் - பகுதி 12)

(1)
திருவாவடுதுறை தலத்தில் சம்பந்த மூர்த்தி எழுந்தருளியிருந்த சமயத்தில், தந்தையாரான 'சிவபாத இருதயர்' அங்கு வருகை புரிந்து, 'சீகாழியில் சிவவேள்வி புரிதற்குப் பொருட்தேவை உள்ளதென்று' புகல்கின்றார். சிவஞானச் செல்வர் ஆவடுதுறை ஆலயத்துள் இறைவரின் திருமுன்பு சென்று, பொன் வேண்டும் குறிப்புடன் 'இடரினும் தளரினும்' எனும் பாமாலையால் போற்றி செய்து விண்ணப்பிக்கின்றார். உடன் சிவபூதகணமொன்று  அங்கு தோன்றி, அங்குள்ள பலிபீடத்தில் 1000 பொன் அடங்கிய முடிப்பினை வைத்து, 'இது இறைவர் உமக்கருள் செய்தது' என்றுரைத்து மறைகின்றது. 

நம் அப்பர் சுவாமிகள் இவ்வரிய நிகழ்வினை 'கழுமல ஊரர்க்(கு) அம்பொன் ஆயிரம் கொடுப்பர் போலும் ஆவடுதுறையனாரே' என்று பதிவு செய்து போற்றுகின்றார்,

(திருவாவடுதுறை தேவாரம் - திருப்பாடல் 1)
மாயிரு ஞாலமெல்லா(ம்) மலரடி வணங்கும் போலும்
பாயிரும் கங்கையாளைப் படர்சடை வைப்பர் போலும்
காயிரும் பொழில்கள் சூழ்ந்த கழுமல ஊரர்க்(கு) அம்பொன்
ஆயிரம் கொடுப்பர் போலும் ஆவடுதுறையனாரே

(2)
மற்றொரு சமயம் அப்பர் சுவாமிகள் ஞானசம்பந்த மூர்த்தியுடன் திருமறைக்காட்டிற்கு எழுந்தருளிச் செல்லுகையில், அங்கு பன்னெடுங்காலமாய்த் திறவாதிருந்த ஆலயத்தின் பிரதான வாயிற் கதவினைச் சுவாமிகள் திறக்கப் பாடுகின்றார். வழிபாடு நிறைவுற்ற பின்னர், சம்பந்தச் செல்வர், நெடுநாள் திறவாதிருந்த தன்மை சீர்பெறும் பொருட்டு மீண்டுமொரு முறை அடைப்பிக்கப் பாடுகின்றார். 

அன்றிரவு துயில் கொள்ளுகையில், திருவாய்மூர் மேவும் தேவதேவர் சுவாமிகளின் கனவில் தோன்றி, 'நம் வாய்மூருக்கு வருக' என்றருள் புரிகின்றார். அந்நள்ளிரவு வேளையில் சுவாமிகள் பெரும் ஆர்வத்துடன் வாய்மூருக்கு விரைந்து செல்கின்றார். வழிதோறும் வாய்மூர் முதல்வர் ஆங்காங்கே தோன்றுவதும் மறைவதுமாய்த் திருவிளையாடல் புரிந்தருளி, அங்குள்ள ஆலயத்துள் புகுந்து மறைகின்றார். 

இந்நிகழ்வினைப் பின்னர் அறியப் பெறும் சம்பந்தப் பெருமானார் 'இவ்வேளையில் சுவாமிகள் சென்றிருக்கும் காரணம் தான் யாதோ?' என்றெண்ணியவாறு அவ்வழியிலேயே தாமும் பின்தொடர்ந்து செல்கின்றார். அங்கு சிவதரிசனம் கிட்டாது பரிதவித்து நின்றிருந்த சுவாமிகள் 'ஐயனே, உன் திருவுளம் அறியாது; காலமற்ற காலத்தில் ஆலயக் கதவினைத் திறப்பித்த அடியேனுக்கு நீர் உம்மை மறைத்தருளியது முறையே! எனினும் அடியேனின் அத்தவறினை சீர்செய்யும் பொருட்டு, மணிக்கதவை முறையாக அடைப்பித்த உம்முடைய சீகாழிச் செல்வர் இங்கு எழுந்தருளி வந்துள்ளார். இனியும் நீர் மறைந்தருள இயலுமோ?' என்று நயம்படப் பாடுகின்றார், 

(திருவாய்மூர் தேவாரம்: 'எங்கேயென்னை' - திருப்பாடல் 8 )
திறக்கப் பாடிய என்னினும் செந்தமிழ்
உறைப்புப் பாடி அடைப்பித்தாரும் நின்றார்
மறைக்க வல்லரோ தம்மைத் திருவாய்மூர்ப்
பிறைக்கொள் செஞ்சடையார் இவர் பித்தரே

No comments:

Post a Comment