அம்பிகையின் ஊடல் போக்க சிவபெருமான் செய்வது என்ன? (அப்பர் தேவார நுட்பங்கள் - பகுதி 6)

உலகியலில் ஒவ்வொருவரும், காதலி அல்லது மனைவி கொண்டிருக்கும் ஊடலைப் போக்க ஓரோர் வகையினைக் கைக்கொள்வர். அம்முறையில் நம் உமையன்னை பரம்பொருளான தன் மணாளரோடு ஊடல் கொள்ளும் சமயங்களில், இறைவர் அதனை எவ்விதம் போக்கியருள்வார்? இதற்கான விடையை நம் அப்பர் சுவாமிகளின் பின்வரும் திருப்பாடலில் பகர்கின்றார்.
-
முக்கண் முதல்வர் கங்கையெனும் நங்கையைத் தன் திருமுடியில் சூட்டிய காரணத்தினால் உலகீன்ற உமையவள் வாட்டமுற்று ஊடல் கொள்கின்றனளாம். உடன் நம் இறைவர் (நால்வேதங்களுள் ஒன்றான) சாமவேதத்தினை இதமாக; இனிமையாகப் பாடிப் பின்னர் அவ்விசையின் தன்மைக்கேற்பத் திருநடமும் புரிந்தருள, நம் அம்மை அக்கணமே ஊடல் நீங்கியவளாய் திருவுள்ளம் மகிழ்கின்றாளாம். 
-
('மடக்கினார் புலியின்' - திருவதிகை தேவாரம் - திருப்பாடல் 2)
சூடினார் கங்கையாளைச் சூடிய துழனி கேட்டங்(கு)
ஊடினா(ள்) நங்கையாளும், ஊடலை ஒழிக்க வேண்டிப்
பாடினார் சாம வேதம் பாடிய பாணியாலே
ஆடினார் கெடிலவேலி அதிகை வீரட்டனாரே
*
இனி இப்பதிவில் அம்பிகை காணுமாறு ஐயன் ஆடிய திருக்கோலத்தினை விளக்கும் சில அற்புதத் திருப்பாடல்களையும் சிந்தித்து மகிழ்வோம்,
-

(1)

'அஞ்சொலாள் காண நின்று அழகநீ ஆடுமாறே' என்று இத்திருப்பாடலில் சுவாமிகள் போற்றுகின்றார்,
-
('பத்தனாய்ப் பாட மாட்டேன்' - தில்லை தேவாரம் - திருப்பாடல் 9)
நெஞ்சினைத் தூய்மை செய்து நினைக்குமா நினைப்பியாதே
வஞ்சமே செய்தியாலோ வானவர் தலைவனேநீ
மஞ்சடை சோலைத் தில்லை மல்கு சிற்றம்பலத்தே
அஞ்சொலாள் காண நின்று அழகநீ ஆடுமாறே

(2)

'குயிலாரும் மென்மொழியாள் குளிர்ந்து நோக்கக் கூத்தாடவல்ல குழகர் போலும்' என்று இத்திருப்பாடலில் சுவாமிகள் பணிந்தேத்துகின்றார்,
-
('மானேறு கரமுடைய' - திருவீழிமிழலை தேவாரம் - திருப்பாடல் 11)
கயிலாய மலையெடுத்தான் கதறி வீழக்
கால்விரலால் அடர்த்தருளிச் செய்தார் போலும்
குயிலாரும் மென்மொழியாள் குளிர்ந்து நோக்கக் 
கூத்தாடவல்ல குழகர் போலும்
வெயிலாய சோதி விளக்கானார் போலும்
வியன்வீழி மிழலைஅமர் விகிர்தர் போலும்
அயிலாரும் மூவிலைவேல் படையார் போலும்
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே

(3)

'இவர்ஆடுமாறும் இவள் காணுமாறும் இதுதான் இவர்க்கொர் இயல்பே' என்று இத்திருப்பாடலில் குறிக்கின்றார்,
-
('சிவனெனும் ஓசை' - பொதுப் பதிகம் - திருப்பாடல் 3)
தேய்பொடி வெள்ளை பூசி அதன்மேலொர் திங்கள் திலகம் பதித்த நுதலர்
காய்கதிர் வேலை நீல ஒளிமா மிடற்றர்; கரிகாடர்; காலொர் கழலர்
வேயுடனாடு தோளியவள் விம்ம வெய்ய மழுவீசி வேழஉரி !போர்த்
தேஇவர்ஆடுமாறும் இவள் காணுமாறும் இதுதான் இவர்க்கொர் இயல்பே

(4)

இத்திருப்பாடலில் 'காம்பாடு தோள்உமையாள் காண நட்டம்  கலந்தாடல் புரிந்தவன் காண்' என்று '(மூங்கிலனைய திருத்தோள்களை உடைய) உமையன்னை காண இறைவர் திருநடம் புரியும்' மாண்பினைச் சுட்டுகின்றார் சுவாமிகள், 
-
('புரிந்தமரர் தொழுதேத்தும்' - திருப்புத்தூர் தேவாரம் - திருப்பாடல் 6)
காம்பாடு தோள்உமையாள் காண நட்டம் 
கலந்தாடல் புரிந்தவன்காண்; கையில் வெய்ய
பாம்பாடப் படுதலையில் பலிகொள்வோன் காண்
பவளத்தின் பருவரைபோல் படிவத்தான் காண்
தாம்பாடு சினவிடையே பகடாக் கொண்ட
சங்கரன் காண்; பொங்கரவக் கச்சையோன் காண்
சேம்பாடு வயல்புடைசூழ் திருப்புத்தூரில்
திருத்தளியான் காண் அவனென் சிந்தையானே

No comments:

Post a Comment